நாங்களும் பெண்கள்

புதுக் கவிதை


நாங்கள் பெண்கள்;
நம்பிக் கைப்பிடித்தவர்கள்; அதற்காக
மலடி, விதவை, வாழாவெட்டி, பேதை எல்லாம்
நாங்கள் பெற்ற சிறப்பு விருதுகள்!
எங்கள் ஒய்வறை அடுபங்கரைதான்;
எரிவாயு வெடி மத்தாப்பு;
எங்களுக்கு விழாவெடுக்க ஏற்பாடுகள்!
எங்களுக்கு மண்ணெண்ணெய் சிலசமயம்,
குளிக்கும் நீராவதுமுண்டு!
தாய்ப்பால் உங்களுக்கு மட்டுமே; எங்களுக்க்கோ கள்ளிப்பால் தயார்!
எங்கள் பிறப்பே எங்கள் பெற்றோர்க்குச் சுமை!
நாங்கள் அவர்களைப் பிடித்த சனியன்!
போகிறவர் வருகிறவர்க்கெல்லாம் நாங்கள் கொலு பொம்மைகள்;
அப்போதுதானே எங்களை போட்டுடைக்க முடியும்!
நாங்கள் குடும்ப விளக்காம்;
ஏனெனில் தீக்குச்சிக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவாம்!
விடுதலை இந்தியாவின் வீரப் பெண்கள் நாங்கள்;
அதனால்தானோ என்னவோ பதினாறு மணிநேரமும் உழைக்கிறோம்!
மீதி எட்டு மணிநேரம் அவர்களுக்கு ஓய்வு வேண்டுமாம்!
அகலிகை மட்டுமல்ல; உயிரோடு வாழ்ந்தாலும் சிலசமயம்,
நாங்களும் கல்லினும் கீழாய்த்தானிருக்கிறோம்!
எங்களைப் பொருத்தவரை
முப்பத்துமூன்று விழுக்காடென்பது
ஓட்டைச் சட்டியில் ஊற்றிய பாலே!
எப்போது எங்களுக்கு விடியல்?
இருட்டிலே விடுதலைக் கொடியின்
வண்ணம் தெரிய வில்லையே!


பாவலர் திருமதி சூரிய விசயகுமாரி
புதுச்சேரி