இராஜ. தியாகராஜன் - மின்னஞ்சல்: tyagu@pudhucherry.com

இணையத் தமிழிலக்கியம்
(Tamil Literature in the Internet era)


இணைய யுகத்தில் இணையத் தமிழிலக்கிய வளர்ச்சி

           தேமதுரத் தமிழ்மொழியில், இணையத்தமிழ், தனித்தமிழ், தூயதமிழ், கொடுந்தமிழ், பழந்தமிழென தனித்தனியாகப் பிரித்துச் சொல்ல ஏதுவாக பிரிவுகள் ஏதுமில்லை. எல்லாமே செம்மொழியாம் நம்மொழிதான். வழக்கிலே பலவாறாக பயன்பாட்டாளர்கள் பிரித்துப் பேசுகின்றனர் அவ்வளவே! தனித்தமிழ், தூயதமிழ், கொடுந்தமிழ், பழந்தமிழ் இவ்வனைத்தும் தமிழன்பர்கள் அனைவரும், பலநிலைகளில் இலக்கண, இலக்கிய சுத்தமாக அறிந்திருக்கக் கூடியவையே. ஆனால் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இணையத்தமிழென்று புதிதாக கிளம்பியிருப்பது எது?

          இதன் விளக்கமாக முதலில் ஒரு முன்னுரை: இதுவரை நாம் எழுதுகோல், தீந்தா, தாள், அச்சு இவற்றின் துணையோடு, நாள்/வார/மாத/ஆண்டு இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தான் கன்னல் தமிழைச் சுவைத்தோம். இன்றோ கணினியும், இணையத் தொடர்பும், இணையதளங்களும், யூனிகோடு எழுத்துச் சீர்மையும், வலைக்குடில்கள் எனப்படும் வலைப்பதிவுகளும் கோலோச்சும் காலகட்டத்தில், இணையத்திலும் நமது தங்கத் தமிழ் கைவீசி, வெற்றிநடை போடுகிறதென்றால் அது மிகையான சொல்லல்ல! தமிழில் இணையதளங்களும், வலைக்குடில்கள் என்று கலைநயத்தோடு அழைக்கப்படும் தமிழ் வெப் பிளாக்குகளும்
(Tamil Web-blogs), செய்திப் பலகைகளும், பல்லாயிரக் கணக்கில் உருவாக்கப் பட்டு, உலகின் பல மூலைகளிலும் உள்ளவர்கள் தமது தமிழாக்கத் திறமைகளை வெளிக் கொணரத் தலைப்பட்டுள்ளனர்.

          பத்திரிக்கைச் சுற்றும், புத்தக வெளியீடும், ஒருவரது ஆக்கங்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலும் தான் வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு சொல்ல முடியும். ஆனாஅல் இணைய இணைப்பும், தரமான கணினியும் வைத்திருந்தால் போதும், எவரும் தனி/குழும மின்மடல்கள் வழியாக இருக்கின்ற இருக்கையிலிருந்து கொண்டே, தமது படைப்புகளை இணையதளங்களுக்கு அனுப்பி பன்னாட்டரரும் காணும்படி செய்ய இயலும். அது போலவே அனைத்து நாட்டின் இணையத் தமிழ் அன்பர்களின் ஆக்கங்களை படித்து இன்புற முடியும். வெறும் நூறாண்டுக்கு முன்னர் பதிப்பித்த படைப்புகள் கூட இன்று நகல் கிடைக்காமல் அல்லாடுகிறோம். நானே இன்று ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் யாப்பருங்கலக் காரிகை உரையின்
1940 ஆம் ஆண்டின் பதிப்பினைத் தேடித்தேடி அலுத்துப் போனேன். தேசிகமாலையெனும் நூல் போன இடந் தெரியவில்லை. யாப்பருங்கலக் காரிகை விருத்தியின் பதிப்போ மிகக் குறைந்த அளவிலேயே நூலகங்களில் இருப்பதாகக் கேள்வி. ஆனால் இணையத்தில் வெளியாகும் படைப்புகள் காலத்தால் அழியாத காவியமாக நிற்கக் கூடியவை, ஏனெனில் இணைய இதழ்களின் பின்னோக்கிய பதிப்புகள் சேமிக்கப்படுவது குறுந்தகடுகளில் (Compact Disc)

          மதுரை ப்ராஜக்ட் (Madurai Project) வழியாகவும், தஞ்சை பல்கலைக் கழக இணையதளத்தில் வழியாகவும் (Tamil Virtual University) இன்றிருக்கும் அனைத்து சங்க இலக்கியங்களும், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களும், 15 ஆம் நூற்றாண்டிற்கு பின் வந்த இலக்கியங்களும், இன்னும் இன்றைய இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கியங்களும் வலையேற்றம் செய்யப்பட்டு, கடற்கோளோ, நெருப்போ, நிலநடுக்கமோ, எதுவும் அண்ட முடியாத வடிவத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளன. தமிழன்பர்களின் வசதிக்காக இழைகளை கீழே தருகிறேன்.

http://www.infitt.org/pmadurai/index.html
http://www.tamilvu.org/
http://www.uni-koeln.de/phil-fak/indologie/tamil/otl.html
http://www.infitt.org/minmanjari
http://www.thirukkural.net

மேலும் இன்று ஒவ்வோரு இணையதளமும் ஒவ்வோரு எழுத்துருவினை பயன்படுத்தி தளத்தினை உருவாக்கும் நிலை மாறி, அனைவரும் ஒரே வகையில் யூனிகோட் எழுத்துருக்களைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்ட படியால், இன்று தேடு தளங்களில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்தே பக்கங்களை, விவரங்களை, தளங்களை தேடும் வசதியினை அடைந்திருக்கிறோம். எழுத்துக்களை சேவையர் கணினியில் (Server Computer) பதிக்கும் மென்பொருள் வசதி கூட வந்துவிட்ட படியால், எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் பதித்துக் கொள்ளும் தொல்லைகள் கூட குறைந்து விட்டன. இத்துடன் கூடுதல் விவரமாக, இன்று மரபிலக்கியத்தினை போற்றி வளர்க்கும், யாகூ குழுமங்களும், இணையதளங்களும் பல இருக்கின்றபடியால், இணையத்தில் வளர்வது வெறும் உரைநடை, புதுக்கவிதை, கட்டுரைகள், கதைகள் மட்டுமல்ல, மரபிலக்கியப் படி எழுதப்படும் தமிழ் பாடல்களும்தான். கடைசியாக, இன்றைய காலகட்டத்தில், சுற்றுசூழலைப் பாதுக்காக்க ஏதுவாக மரங்களின் பாதுகாவலனாகவும் இணைய இலக்கியம் செயல்படுகிறது. எப்படியெனில், மின்மடலுக்கும், இணைய பக்கங்களுக்கும் தாளுக்கு வேலையில்லாமலேயே தமிழ் வளர்கிறதே!

அன்புடன்
இராஜ.தியாகராஜன்.


-:o:O:o:-