இராஜ. தியாகராஜன் - மின்னஞ்சல்: tyagu@pudhucherry.com

அரசர்கள் ஆட்சியில் புதுச்சேரி
(Pondicherry under the rule of Kings)


நன்றி -
"புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட வரலாறு"
பள்ளிக் கல்வித் துறை
புதுச்சேரி அரசு

வரலாற்று ஆதாரங்களும் மூலங்களும்

          ஏசு கிறிஸ்து பிறப்பின் துவக்க நூற்றாண்டுகளின் தமிழகத்தின்/ தமிழ் மொழியின் வரலாற்றினை வரையறுப்பது மிக எளிதான செயலன்று. கிபி ஒன்று முதல் ஐந்து நூற்றாண்டுகள் வரை, வரலாற்றாசிரியர் அறிந்து ஆராய போதுமான வரலாற்று ஆதாரங்கள் போதுமான அளவில் கிடைக்காத காரணத்தால், தமிழக வரலாறு குழப்பமானதாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த ஐந்தாண்டுகளில், களப்பிரர்களும், சங்ககால சேர, சோழ, பாண்டியர்களும் தமிழகத்தினை ஆட்சி செய்துள்ளாக தெரிகிறது. ஆயினும் அவ்வரசர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியவில்லை. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் முற்கால பல்லவர்கள் காலத்திலிருந்து ஓரளவு தெளிவான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கின. அவர்கள் காலத்திய குகைவரைக் கோயில்கள், கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், அயல்நாட்டவர் குறிப்புகள், நாணயங்கள், இலக்கிய நூல்கள் இவைகளின் வாயிலாக, அரசியல் பொருளாதார, வாழ்க்கை மாற்றங்களைப் பற்றி நிறையவே அறிய முடிகிறது.

          கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அரிக்கமேடு பன்னாட்டளவில் புகழ்பெற்ற ஒரு மாபெரும் வணிகத்தலமாக விளங்கியதென்றால் அது மிகையல்ல. ஐரோப்பா பக்கமிருந்து வந்த யவனரென்று அழைக்கப்பட்ட ரோமானியர்களும், மகமதியர்கள் எனப்பட்ட அரேபியர்களும் அக்காலத்தில் வணிகத் தொடர்பாய் தமிழகம் வந்து தங்கியதாக அறியமுடிகிறது. அவர்களின் வருகைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. செப்பேடுகளின் வாயிலாக இரண்டாம் நந்திவர்ம பல்லவன் (கி.பி. எழுநூற்று முப்பத்து ஒன்று - எழுநூற்று தொண்ணூற்று ஆறு) காலத்திற்கு முன்பிருந்தே காரைக்கால் பல்லவர்க்குரியதாக கருத வேண்டியுள்ளது. அடுத்து புதுச்சேரிப் பகுதியும் பல்லவர் ஆட்சியின் கீழிருந்ததை நிருபதுங்க வர்மன் செப்பேடு (கி.பி. எண்ணூற்று ஐம்பத்து ஒன்பது - எண்ணூற்று தொண்ணூற்று ஒன்பது) காட்டுகிறது. பின்னர் சோழப் பேரரசில் முதலாம் இராஜராஜன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் (கி.பி. தொள்ளாயிரத்து எண்பத்தைந்து - ஆயிரத்து இருநூற்று எழுபத்தொன்பது) வரையிலான பல கல்வெட்டுக்கள் புதுவையில் கிடைத்துள்ளன. பின்னாளில் வந்த விஜய நகர வேந்தர்கள், நாயக்க மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. ஆக சரியாகச் சொல்ல வேண்டுமெனில், பழந்தமிழகத்தில் புதுச்சேரிப் பகுதி தொண்டை நாட்டிலும், காரைக்கால் பகுதி சோழநாட்டிலும், மாகே பகுதி சேர நாட்டிலும், ஏனாம் பகுதி கிழக்கு கோதாவரிக் கரையில், இன்றைய காக்கிநாடாவை ஆண்ட இராட்டிரகூடர்கள், தெலுங்கு சோழர்கள் நாட்டிலும் இருந்திருக்கின்றன. இவ்வாறாக புதுச்சேரியின் வரலாற்றுச் சின்னங்களாக திகழ்பவை இங்குள்ள கோயில்களே! புதுவைப் பகுதியில் பாகூர், வில்லியனூர், திருவாண்டார் கோயில், திரிபுவனை, மதகடிப்பட்டு முதலான ஊர்களிலிருந்து ஏறக்குறைய
450 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. காரைக்கால் பகுதியிலிருந்து, காரைக்கால், நல்லம்பல், மாதுர், நெடுங்காடு, கீழ்க்காசாக்குடி, மேல்காசாக்குடி, திருமலைராயன் பட்டினம், சேத்தூர், சொரக்குடி, திருநள்ளாறு முதலான ஊர்களிலிருந்து ஏறக்குறைய 185 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. திருநள்ளாறு கோயில் கல்வெட்டுக்கள் சேதாரமில்லாத முழுக் கல்வெட்டுக்கள். ஏனாமில் கல்வெட்டுக்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. மாகேயில் நான்கு கற்பலகையில் மட்டும் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெற்றன. ஆனால் எழுத்து அவ்வளவாக தெளிவாக இல்லை.

          கி.பி.
992-1042இல் வாழ்ந்த சேக்கிழார், தமது பெரியபுராணத்தில், "கப்பல் வந்து நிறைய நின்றுள்ள காரைக்காலென்று" குறிப்பிடுகிறார். சைவ சமயத்தில் முதல் நான்கு சமக்குரவர்களில், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர் காலத்திற்கு மூத்தவரான, புனிதவதியார் காரைக்காலில் வாழ்ந்திருந்ததால் காரைக்கால் அம்மையார் எனப் போற்றப் பட்டார். சேக்கிழார் குறிப்பின்படி காரைக்கால் அந்நாளில் காரைக்கால் மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது. மகேந்திர பல்லவன் (கி.பி. ஐநூற்று எண்பது - அறுநூற்று முப்பது) காலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய பச்சைப் பதிகம் எனப்படும் தேவாரப் பாடல்களினின்று திருநள்ளாறு இறைவர் பற்றிய கோயில் விவரங்களை அறியமுடிகிறது. கி.பி ஆயிரத்து முன்னூறுக்குப் பின் விஜயநகர வேந்தர்களின் ஆளூகைக்குட்பட்ட பகுதியாகப் புதுச்சேரி இருந்திருக்கிறது.

-:o:O:o:-