ஆழிப் பேரலையின் சீற்றத்தால் கிழக்காசிய நாடுகளில் பேரழிவு
(Devastation of TSUNAMI in the coastal areas of East Asian Countries)

-:o:OOO:o:-

பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய ஆழிப் பேரலையின் துவக்கமான நிலநடுக்கம் உருவான இடம்:


அனைத்து நாடுகளிலும் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட உயிர்ச்சேத விவரங்கள்:-
(Upto, 3rd JANUARY, 2005)

எண் நாட்டின் பெயர் உயிரிழந்தோர் எண்ணிக்கை காணாமல் போனவர் எண்ணிக்கை
01 இந்தோனேசியா 101,318(approx) இன்னும் அறுதியிடப்படவில்லை - ஆயிரக்கணக்கில் இருக்கலாம்
02 இலங்கை: 30,615 இன்னும் அறுதியிடப்படவில்லை - 4,356
03 இந்தியா: 9,691 தோராயமாக 6,010
04 தாய்லாந்து: 5,046 அறுதியிடப்படவில்லை - 1000
05சோமாலியா:142விவரமில்லை
06மியன்மார்:68விவரமில்லை
07மாலத்தீவுகள்:8226
08மலேசியா:67அறுதியிடப்படவில்லை
09தான்சேனியா:10விவரமில்லை
10செய்செல்ஸ்:1விவரமில்லை
11வங்கதேசம்:2விவரமில்லை
12கென்யா:1விவரமில்லை
13மொத்தம்14702011,392

மேலும் இது பற்றிய செய்திகள் அறிய பல்வேறு செய்தி நிறுவனங்களின் தளங்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன:-

இந்து நாளிதழ்ச் செய்தி நிறுவனம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம்
இந்தியா டுடே செய்தி நிறுவனம்
ரூட்டர்ஸ் செய்தி நிறுவனம்
பி.பி.சி. செய்தி நிறுவனம்
சி.என்.என். செய்தி நிறுவனம்
ஏ.பி.சி.நியுஸ். செய்தி நிறுவனம்
சி.பி.எஸ்.நியுஸ் செய்தி நிறுவனம்
சிட்னி மார்னிங் எரால்ட் செய்தி நிறுவனம்
எரால்ட் டிரைபியூன் செய்தி நிறுவனம்
எம்.எஸ்.என். செய்தி நிறுவனம்

          ஒன்பது என்ற ரிக்டர் அளவில் இந்தோனேசியாவிற்கு அருகில் சுமத்திரா தீவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலின் அடித்தரையில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் தோன்றிய கடல் கொந்தளப்பில் உருவான ஆழிப் பேரலைகள், இந்தியாவின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இந்தக் கடும் நிலநடுக்கத்தின் விளைவாக தெற்கு ஆசியக் கடலோரப் பகுதி முழுவதையும் சனவரி இருபத்தாறாம் நாள், ஞாயிற்றுக் கிழமை காலை தாக்கிய கடல் கொந்தளிப்பில் பலியானோரில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த அளவாக ஒன்பது நாடுகளில், இதுவரையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்தைத் எட்டி உள்ளதாக ஆதாரமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கணக்கில் வராமல் தொலைந்து போயும், கதி என்ன என்று கூறமுடியாதபடிக்கு தொடர்பறுந்த நிலையிலும் இருக்கிறார்கள். அனைத்து நாடுகளிலும் முடிவான இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து அம்பதினாயிரம் வரையிருக்குமென தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

          இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்துக்கு மேல் எனவும், சேதம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பும் அழுகிய நிலையில் உடல்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஆறாயிரத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தொலைக் காட்சிகளும் செய்தித்தாள்களும் தெரிவிக்கின்றன. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் நில நடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மூன்றாயிரத்திற்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டாலும், இதுவரை காணாமல் போனவர் எண்ணிக்கையும் சேரும் போதில் இந்தியாவில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை பன்னிரெண்டாயிரத்திற்கும் மேல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களான, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகியவையும் பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதுவரை வந்த தகவல்களின்படி நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் மட்டுமே அதிக அளவில் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற பலநூறு மீனவர்களின் நிலை பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை குறித்து இந்திய அரசு ஆதாரமான தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. அந்தமான் பகுதியில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமாக உயிரிழந்திருப்பதாகவும் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப் படுகிறது. கார்நிக்கோபார் மற்றும் நான்கவுரி தீவுகளுடன் முற்றிலுமாக தொடர்பு துண்டிக்கப் பட்டிருப்பதால் அங்கு வசித்துவந்த பதினெட்டாயிரம் பேரின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தட்டையான நிலப்பரப்பைக் கொண்ட அந்தத் தீவுகளில் மக்கள் அலைகளில் இருந்து தப்பி ஒதுங்குவதற்கு மேட்டுப்பகுதிகள் கூட இல்லை. குவியல் குவியலாக பிணங்களை புதைக்கும் பரிதாப நிலையை இன்றுதான் தமிழகம் சந்திக்கிறது. தரங்கம்பாடி போன்ற இடங்களில் ஐந்து கிலோமீட்டர் வரை கடல் நீர் உள்ளே வந்து பிறகு வடிந்து இருக்கிறது. தரங்கம்பாடியில் மட்டுமே ஆழிப் பேரலை ஆயிரத்து இருநூறு பேரை பலி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தின் பகுதியான காரைக்காலில் நானூறுக்கும் மேற்பட்ட சடலங்கள் இதுவரை புதைக்கப்பட்டுள்ளன. அவர்களில் இருநூறு பேர் ஒரே இடத்தில் கூட்டாக புதைக்கப்பட்டுள்ளனர்.

          இதுவரை கிடைத்த தகவல்கள் படி இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை தொண்ணூறாயிரத்திற்கும்மேல். இந்தோனேசியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என தான் அஞ்சுவதாக நாட்டின் துணை அதிபர் யூசுஃப் கல்லா கூறுகிறார். குறிப்பாக தென்மேற்கு அசே பகுதியின் சேதங்கள் பற்றி பெரும் கவலைகள் தெரிவிக்கப் படுகின்றன. சுமார் பத்து இலட்சம் பேர் வாழும் அப்பகுதி இன்னும் முற்றிலுமாக தொடர்பறுந்த நிலையில் இருக்கிறது. இனி உடல்கள் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் உலக நாடுகள் அவை, மற்றைய நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். இன்னும் நிவாரண உதவிகள் மக்களை முழுதும் சென்றடையா வண்ணம் போக்குவரத்து துண்டிக்கப் பட்ட நாடு இதுவே.

          இந்த பேரழிவுச் சம்பவத்தில் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடி இதுவரை அதிகபட்ச உயிரிழப்புகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ள நாடு இலங்கைதான். அங்கே இருபத்தொன்பதாயிரத்திற்கும் அதிகமாக கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கரையோரப் பகுதிகளில் உயிர்தப்பியவர்களை மீட்கும் பணியில் நாட்டின் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இறந்தவர்கள் எண்ணிக்கை முப்பத்தையாயிரத்துக்கும் அதிகமென கூறப்படுகிறது. இன்னும் இறந்தவர்களின் சடலங்கள் எடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஆதாரமான தகவல்கள் இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் சேற்றையும் இடிபாடுகளையும் தோண்டி, எஞ்சிய உணவுப் பொருட்களையும் உடமைகளையும் தேடிவருகின்றனர். நீரைச் சுத்தம் செய்யும் ரசாயனம் மற்றும் கூடாரங்கள், போர்வைகள், மருந்துப் பொருட்களுக்கான மிக அவசரத் தேவை இருப்பதாக இலங்கை அரசு கூறுகின்றது. யாழ் மாவட்டத்தில் ஆயிரம் சடலங்கள் மீட்கப்படிருக்கின்றன; மூன்றாயிரம் பேர் வரையில் காணவில்லை என்று மதிப்பிடப்படுகிறது. யாழ் மாவட்ட அரசு கட்டுப்பாட்டுப் பகுதியான பருத்தித்துறை பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளது. இங்கு சடலங்களை மீட்பதிலும், நிவாரணப் உதவிப் பொருட்களை வழங்கப்படுவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

          தாய்லாந்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் மேலென கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாமென தொலைகாட்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக விடுமுறைக்கு வந்த வெளிநாட்டவர்கள் அதிகம் உயிரிழந்த நாடு இதுவே. சுவீடன் நாட்டவர் அதிகம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

          இப்போது கடற்பேரலையினால் ஏற்பட்ட அபாயத்தை விட மற்றொரு மிகப் பெரும் அபாயம் குடிநீர் மற்றும் சுற்றுச் சூழல் கேட்டினால் பரவக் கூடிய கொள்ளை நோய்கள். அரசாங்கமும், மற்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மிக விரைவாகச் செயல் பட்டு சிதறிக்கிடக்கும் உடலங்களை அப்புறப்படுத்த முயன்று வருகிறார்கள். உடமை, உறவுகள், வீடிழந்த மக்களுக்கு தூய்மையான குடிநீரும், உணவும் கிடைத்திட ஆவன செய்கிறார்கள். பொருள் இழப்புகளை சந்தித்த பொதுமக்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை அளிக்க புதுவை அரசு ஆவன செய்கிறது. புதுவையின் மக்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்க *முதலமைச்சர் நிவாரண நிதி, புதுச்சேரி அரசு, புதுச்சேரி-605001* என்ற முகவரிக்கு காசோலைகள் அல்லது வரைவோலைகள எடுத்து, காசோலை/வரைவோலையின் பின்புறம் தங்கள் பெயர்/முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு, *தலைமைச்செயலர், தலைமைச்செயலகம், கடற்கரைச்சாலை, புதுச்சேரி - 605001, இந்தியா* என்ற முகவரிக்கு அனுப்பி உதவிடும்படி தமிழன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

-:****:-

இராச. தியாகராசன்.