பாவேந்தர் நினைவாக

புகைபிடித்தே வெதும்பிடாதே


இன்னலே மிகுந்த போதும்
.....இழுப்பதை இதமாய் எண்ணித்
தன்னையே தானே மாய்க்கும்
.....தகவிலா வினையைத் தள்ளி
மென்மையாம் சுவாசப் பையை
.....வெந்திடா வண்ணம் காக்கும்
நன்மையே நாடி யிங்கே
.....நவின்றிடும் சொல்லொன் றுண்டு.

புகையிலை நுகர்வோர் தம்மை
.....புற்றுநோய் பற்றிக் கொள்ள
வகைவகை வருத்தம் யாவும்
.....வாரியே வழங்கிச் செல்லும்
சுகமெலாம் சிதறி யோடச்
.....சுந்தரக் கனவும் மாய்க்கும்
மிகையிலை, மீண்டும் சொல்வேன்
.....வேதனை வேண்டாம் அய்யா.

பொறுப்பிலா வாழும் நோக்கால்
.....புகைப்பதைப் பெரிதாய் எண்ணிக்
குறுகிய வாழ்நாள் மேலும்
.....குலைத்திடும் அவலம் வேண்டாம்
உறுதியாய் விலக்கி நின்றால்
.....ஒதுங்கிடும் கேடு யாவும்
வெறுத்திடும் வாடை வீச்சும்
.....விலகியே ஓடும் அய்யா.

நஞ்சாம் புகைபிடி யாதே-வெறி
.....நாடி மயங்கியே மடியாதே
பிஞ்சாய் வெதும்பி டாதே-பெற்ற
.....பிறவி பேணாமல் மாய்ந்திடாதே.

பாவலர் இரா. சௌந்தரராஜன்,
கனடா