நம்பிக்கை

தனிப் பாடல்


நேற்றைக்கிங்கோர் நெடுமரந்தன்னில் நிறைந்திருந்த பச்சிலைகளெல்லாம்,
காற்றடிக்கக் காம்பொடிந்து கதறித்தான் வீழ்ந்தனவே!
காற்றடித்து வீழ்ந்தாலும் மண்ணுக்குள் எருவாகி;
மரமதுவின் வலிமையதை மங்காது உரமாக்கும்!

சீற்றமிகு சிங்கம்போல் சீறிவந்தக் கதிரவந்தான்,
மேற்றிசையின் மலைமடியில் மோகமுடன் வீழ்ந்துவிட்டான்!
மேற்றிசையின் மலைமடியில் வீழ்ந்துவிட்ட கதிரவனும்,
ஊற்றுமொளிப் பிழம்பாகி உதித்திடுவான் கீழ்த்திசையில்!

நேற்றைகிவ்வூர் கலங்க நிமிர்ந்துவந்த மேல்காற்றோ,
ஆற்றலெலா மொடுங்கக் கீழ்ஆழிக்குள் போயிற்றே!
ஆற்றலெலாம் மீண்டுவர ஆழியிலே நீர்முகந்தே,
ஏற்றுவரு கொண்டலென இங்குவரக் காண்போமே!பாவலர் (ஷைலஜா) மைதிலி நாராயணன்
பெங்களூர்