இன்னொரு தினம்

தனிப் பாடல்


ஒவ்வொருவருக்கும் ஒரு தினமென்ற
புது மரபு புவியெங்கும்
அன்னையின் நினைவில் உருகி நிற்க ஒன்று
தந்தையின் கடமையை நன்றி கோரி வேறொன்று
உள்ளத்தில் அமிழ்ந்திருக்கும் உன்னதக் காதலை
வெட்ட வெளிச்சமாக்க மற்றொன்று

தனியொருதினம்
தேவையென்று பலரும் இல்லையென்று சிலரும்
ஆண்டுக்கொரு முறை ஆடி அடங்கிடுவர்.

பழமையில் ஊறிய பத்தாம் பசலி பத்தினியும்
பேத்தல் என வாய் மொழிந்து ஒதுக்கிவிட்டு
காதல் கணவனின் வாழ்த்தட்டையில் மகிழ்ந்தும்
அன்பு மகனின் வாழ்த்தொலியில் திளைத்தும்
ஆயிரம் பிகு செய்து பின் ஆயிரத்தில் புடவையும்
அழகாய் இடுப்பில் சொருகிக் கொள்வாள்

நேற்று மகளிர் தினமென தெருவெங்கும் கும்மாளம்
எங்களுக்கும் ஒன்று வேண்டும்
ஒரு வாழ்த்தோ புன்னகையோ மங்கையாய் பிறந்து
மருகிழந்து உருகுலைந்து சுவையான விருந்தளிக்கும்
எங்களுக்கும் வேண்டும்; தனியொரு தினம்.

தாயாய், மங்கையாய், மகளாய் மன்னுயிராய்
தனியொரு கொண்டாட்டம் கிடைகாது எனவறிந்து
அத்தனையும் இருந்தும் அத்தனையிலும் வேறுபடும்
எங்களுக்கும் வேண்டும் 'உழைப்பாளிகள்' தினத்தின்
ஓரத்தில் ஒரு பங்கு

ஊனுருக்கி உயிர் கொடுக்கும் அபாயத் தொழில் செய்யும்
எங்களுக்கும் வேண்டும் தனியொரு அடையாளம்.
பெருவாரி தினங்களின் வரிசையில் முன்னூறு நாட்களில் முப்பது
நாட்களேனும் விடுமுறையென்று பெயர் பூண்ட தினம் வருமா?
'விலைமாதர்' தினமென்று வெறுப்பான பெயர் வேண்டாம்
'மனிதர்கள்' தினமென்ற பொதுவான பெயர் சூட்டி
எங்களையும் அனு (மதிக்கும்!) தினமொன்று வந்திடுமா?பாவலர் சக்திபிரபா
பெங்களூர்