பாவரங்கப் பாவலரழைப்புப் பாக்கள் - இணையத்தமிழ் இலக்கியம்!


சந்தப்பாமணி புலவர் அரங்க. நடராசனுக்கு அழைப்பு

நினைவிலே தொடர்முறையா மனனம் செய்யும்
நெறிகொடுக்கும் அந்தாதிப்பாடல் நெய்யும்
வினையினிலே தேர்ந்தவராம், இலக்கியத்தின்
வித்தகராம், நூல்பலவும் படைத்து மேடை
தனில்பெருமை சேர்ப்பவராம், மரபில் யாப்பில்
சாதனைகள் செய்பவராம், இணயம் பற்றி
புனைந்தெதனைச் சொல்லுகிறார் கேட்கலாமா
புலவர் திரு அரங்கநட ராசன் தானே!பைந்தமிழ்ப் புலவர் கோ புகழேந்திக்கு அழைப்பு

சிந்தையை உழைப்பவர் சொந்தமாய்த் தந்தவர்
சிறைசென்று வென்ற வீரர்!
சந்தமுயர் பாடல்கள் பந்தமுடன் பாடிடும்
சாதனை செய்யும் நல்லார்!
இந்தவரங் கதனிலே இணையத்தைப் பற்றியே
இசையுடன் பாடுவாரா!
பைந்தமிழ்ப் புலவர்கோ புகழேந்தி மேடையில்
பாப்பாட வருக நன்றே!பாவலர் இளங்கோ பாண்டியனுக்கு அழைப்பு

காவலர் துறையின் ஆய்வாளர்!
கவிதையில் உள்ளம் தோய்வாளர்!
பாவகை யாகக் கவிதைகளை
படைத்துக் கொடுக்கும் பாவாணர்!
ஆவலாய் இங்கே குறளாய
அமைப்பினை நடத்தும் செயலாளர்!
பாவலர் , இளங்கோ பாண்டியனார்!
பாவரங்கிதனில் பாடிடுக!பாவலர் இராம கிருட்டின பாரதிக்கு அழைப்பு

வல்ல மைசேர் வள்ளலார்
வார்த்து வைத்த மந்திரச்
சொல்லுக் குள்ளே தன்மனம்
தோய்ந்திருக்கும் பாவலர்
நல்ல பாடல் நாவலர்
இராம கிருட்டின பாரதி
வெல்லும் வண்ணம் கவிதையில்
வித்தகங்கள் காட்டுக!புலவர் துரை மாலிறையனுக்கு அழைப்பு

புலவர் துரைமா லிறையன் எளியோர்
நலமே கருதும் நலத்தர் - பலப்பலவாய்
காவியங்கள் பாடியவர் கன்னலெனத் தந்திடுவார்
பாவரங்கி லேயினிய பா!புலவர் தே சனார்த்தனனுக்கு அழைப்பு

வெண்பாப் புலியாம் விருதுபெற்ற நாவலரே,
பண்,பா பதமிசைக்கும் பாவலரே- எண்ணமுயர்
தங்கக் கவி, தே சனார்த்தனரே, பாடிடுக
இங்கே இணையத் தெழில்!சொல்லாய்வுச் செல்வர் க வேல்முருகனுக்கு அழைப்பு

நல்லாசி ரியர் விருது, நல்லதமிழ் நூல்வரிசை, நாடும் சிந்தை
சொல்லாய்வுச் செல்வர் க வேல்முருகன் சாதனையாய்ச் சொல்லுகின்றார்
பல்லாண்டு தமிழ்த்தொண்டு செய்துவரும் பாவாணர், பாவ ரங்கில்
எல்லோரும் ஆஹ¡ஹ¡ எனும்வண்ணம் இனியகவி தருக நன்றே!முனைவர் பேராசிரியர் உரு. அசோகனுக்கு அழைப்பு

பாங்குள நண்பர்கள் தோட்டம்- அதில்
பாடும் முனைவர் அசோகன் பா நாட்டம்
ஈங்கே புதுப்பா துளிப்பா - அவர்
என்ன கொடுத்தாலும் கேட்போம் களிப்பா!

ஞாலம் இணைக்கும் இணையம்- அது
ஞான உடம்புக்குத் தெம்புக் கணையம்
பாலம் அமைக்கும் இணையம் - ஐயா
பாடுக பாட்டில் எம் நெஞ்சம் இணையும்பாவலர் கோ பாரதிக்கு அழைப்பு

மன்னர் மன்னன் திருமகன்
மாண்பு புரட்சித் கவிஞரின்
அன்புப் பெயரன், செந்தமிழ்
ஆளும் இதயம் கொண்டவர்
பன்மு கத்து வித்தகர்
பாவலர் கோ பாரதி
நன்கு பாடல் நல்குக
நமது நெஞ்சம் வெல்லுக!புலவர் திருமதி பூங்கொடி பராங்குசத்துக்கு அழைப்பு

உலகை இணைத்திடும் உன்னத இணையமே
தொலைவைத் தொலைத்திடும் சூக்கும அறிவியல்
நலமே அதன்புகழ் நல்கிட வருகிறார்
புலவர் திருமதி பூங்கொடி பராங்குசம்!
பேசட்டும், பாடல் பிறக்கட்டும், நல்லொளியை
வீசட்டும் வண்ண விளக்குகளே- நேச
அமைவுடனே பாடல் அளிக்கட்டும், இங்கே
தமிழறி யும்பெருமாள் தாம்!


பாட்டறிஞர் இலக்கியனுக்கு அழைப்பு

சின்னச் சின்னச் தும்பைப் பூ - அது
தேனைச் சுமக்கிறது-சுவை
தேக்கி அழைக்கிறது
சின்னச் சின்னச் சொற்குவைதான் - மொழித்
தேரை அமைக்கிறது- கவித்
தெய்வம் சுமக்கிறது
வன்னத் தமிழில் இலக்கியனார்-பா
வாரித்தந்திடுக- நம்
வாசல் வந்திடுக
இன்னும் வேண்டும் என்றிடவே-கவி
இங்கே நன்றிடுக- ஐயா
எம்மை வேன்றிடுக!


பைந்தமிழ்ப் பாவலர் இளமுருகனார்க்கு அழைப்பு

வளமுடைய தமிழ்மொழியின் அமுதனைய சுவையினிமை
வகையுடனே தருபவர் யார்!
மனமுருக மகிழ்வுறவே வகைவகையாய் கவிதையினை
வழங்கிடவே வருபவர் யார்!
சுளையதனை நறவமதில் சுவைபெறவே அமிழவைத்து
சுகமுடனே வழங்குவார் யார்!
துடிப்புடனே தமிழ்வளர்ச்சித் தொழிலதனை உளம்நிறுத்தும்
துறைவளரும் இளமுருகனார்!பாவலர் திருமதி மணிமேகலைக் குப்புசாமிக்கு அழைப்பு

பார்புகழ் பாவேந்தர் பேத்தி கவிதையில்
பண் அமையப்பா எழுதுபவர்
கூர்தமிழ் பாவலராம் மணிமேகலைக்
குப்புசாமி க்கவி வந்திடுக-இங்கே
கொஞ்சுதமிழ்க்கவி தந்திடுகமுனைவர் பாவலர் சுந்தர முருகனுக்கு அழைப்பு

அவையிலே வியப்புத் தோன்றும்
அகத்திலே இன்பம் ஊன்றும்
எவைஎவை தக்கவென்று
இவர்மனம் அறியும் நன்று
கவர்ந்திடும் மொழிபெயர்ப்பு
காட்டிடும் தமிழுயிர்ப்பு
சுவைபெறத் தருக, இன்றே
சுந்தர முருகன் நன்றே!
கவிமாமணி இலந்தை சு. இராமசாமி,
சென்னை