பாவரங்கத் தலைமைப்பா - இணையத்தமிழ் இலக்கியம்!


பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற் றானை
வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை , வயிற்றானை, துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட் டானை
வித்தானை மறையானை குறையானை வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை, கவிதை யானை
கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை கவிதை யானை
தஞ்சந்தான் என்பவரைத் தள்ளானை புரப்பானைத் தாங்கு வானை
தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகிறேன் காக்க நன்றே!


சமநிலைச் சிந்துப்பாடல்

வானத்து நீலம் வழித்தெடுத்து- அதை
வாரிதித் தண்புனல் தோய்த்தெடுத்து,
தேனைக் கடைந்து திதிப்பெடுத்து- வீசும்
தென்றல் இதழின் சுவைவடித்து
யானையின் பார்வை அளவெடுத்து-உளம்
ஆர்க்கும் உணர்வுத் தினவெடுத்து
கானம் குழைத்துக் கனல்தொடுத்துத்- தமிழ்க்
கவிதை படைத்தனன் பாரதியே!


அறுசீர்

தொடுத்தெ டுத்த சொல்லிலே
சூடு போட்ட நாயகன்
கொடுக்க என்றே தோன்றினான்
கோயில் நெஞ்சில் ஊன்றினான்
முடுக்கி விட்ட வார்த்தைகள்
மூச்சு விட்டு வாழவே
சொடுக்கி விட்ட சாரதி
சுப்ர மண்ய பாரதி!

விருத்தப் பாடல் எண்சீர்க்கு
விடிவு தந்த பாவேந்தர்
அருத்த மிக்க பாடல்களில்
யாவும் இருக்கும் சொற்களிலோர்
நி¢ருத்தம் இருக்கும், தீமைசுடும்
நெருப்பும் இருக்கும், யாப்பினிலே
பொருத்தம் இருக்கும் அவர்பாதம்
போற்றி அரங்கைத் தொடங்குகிறேன்.


எண்சீர்

பாரதியின் பாக்கழனி, பாவேந்தர் பண்ணை
பாவுயிர்ப்பைக் காத்ததெனப் போற்றுவார் இம்மண்ணை
வேரடியில் தமிழீரம் காண்கின்ற பெற்றி
வித்தகர்கள் தமைக்காத்த வீறிதனின் வெற்றி
நேரெடுத்த வீதிகளின் அணிவகுத்த யாப்பு
நிச்சயமாய்த் தமிழ்ப்பாக்கள் பூத்ததிந்தத் தோப்பு
பூரணமாய்ப் பண்பாடு காக்கின்ற சீரே
புதுச்சேரி எனும்பெருமை ஊரிந்த ஊரே!

வீரத்தின் திரு உருவம் வ.வே.சு. ஐயர்
விண்ணதனை மண்கொணர்ந்த அரவிந்தர் மெய்யர்
ஈரத்தைத் தண்ணளியைக் காட்டியருள் அன்னை
எனச்சான்றோர் பெற்றார்கள் இங்கருளின் மின்னை
நேரத்தை நல்லபடி கழித்திடுதற் கென்றே
நிறைவான அரங்கங்கள் பலவுண்டு நன்றே
பூரிப்பைத் தருகின்ற பொன்னான பூமி
புதுச்சேரி எனும்பெருமை ஊரிந்த ஊரே!


கலிவெண்பா!

அன்பர்களே இந்நாள் அரங்கமிங் கோர்புதிய
மின்னலைப் பாய்ச்ச விளைந்த கவியரங்கம்
மின்னலை வீச்சில் விழுந்து கிடப்பவைகள்
என்ன எனச்சொல்ல ஏற்ற கவியரங்கம்
கொட்டிக்கிடக்கின்ற கொள்ளை அறிவொளியை
எட்டிப் பிடிக்க இயம்பும் கவியரங்கம்
மின்னிதழ் மூலம் விருந்து படைப்பதற்கு
அன்பர்களை இங்கே அழைக்கும் கவியரங்கம்
வீட்டுக்குள் கூடத்தில் விஞ்சை உலகத்தைக்
கூட்டிக் கொணர்ந்து கொடுக்கும் கவியரங்கம்
சங்கம் முதற்தொடங்கி தற்காலம் மட்டுமுள
தங்கச் சுரங்கத்தைச் சாற்றும் கவியரங்கம்
அண்டார்ட்டிக்கா பெய்ங்குயின் ஆர்ட்டிக் கரடியெலாம்
கண்காட்சி யாயிங்கே காட்டும் கவியரங்கம்
மேலை இலக்கியத்தின் வீச்சைத் தமிழச்ச்¢
சேலையிலே சித்திரமாய்த் தீட்டும் கவியரங்கம்
செந்தமிழ்த் தொன்மைச் செழிப்பையெலாம் மேல்நாட்டார்
வந்தித்துப் போற்ற வகைசெய் கவியரங்கம்
நிப்பானின் அய்க்கூ தமிழ்வா கனமேறி
செப்பம் அடையச் செதுக்கும் கவியரங்கம்
எண்ணக் கருத்தை இணைய வலைப்பதிவுக்
கிண்ணத்தில் ஏற்றிவிடக் கேட்கும் கவியரங்கம்
கற்றுக்கொடுக்கும் கணினிக் கலாசாலை
பற்றிப் பகரும் பரிசுக் கவியரங்கம்
நாலு சுவர்களுக்குள் நாளும் இருந்தாலும்
நீ£லவான் உச்சி நிமிண்டும் கவியரங்கம்
சின்னக் குழந்தைகளும் தேடி இணையத்தில்
மின்னலோடாட விளம்பும் கவியரங்கம்
இங்கே இணைய இலக்கியப் பாட்டரங்கில்
பங்கேற்க வந்துள்ள பாவலர்காள் வாருங்கள்

கவிஞர்களே, நீங்களெலாம் கால்த்து நெஞ்சத்
தவிசிருந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்
மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்
ஏங்கி வருங்காற்றின் எண்ணப் பிழிவதனை
வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்
ஓடும் கணங்களினை உட்கார வைப்பவர்கள்
பாடும் குயிலுக்குப் பாடம் எடுப்பவர்கள்
எண்ணங்கள், எண்ணத் தெழுச்சிகள் ஏக்கங்கள்
கண்ணில் பனிக்கும் கசிவுச் சிறு நனைப்பு
காணும் அழகுக் கனிவுத் தகதகப்பு
பேணும் அகந்தைப் பிசாசுப் பெருமிதப்பு
கோபம் கொதிப்பு, குமுறல், குறுகுறுப்பு
தாபம் தவிப்பு தனிமை வருந்தகிப்பு
ஆர்வம், அருவருப்பு , ஆனந்தப் புல்லரிப்பு
சோர்வு, சுறுசுறுப்பு, சோகம் துடிதுடிப்பு
வேகம் மதமதப்பு, வீரம் விறுவிறுப்பு
என்றே உணர்வலையில் எக்காளம் செய்பவர்கள்
இன்றிவ்வரங்கில் இனியுங்கள் ஆளுகைதான்.
உங்களுக்கு என்வணக்கம், உங்கள் கவிகேட்கும்
மங்காத ஆசையினால் வந்திப் பொறுப்பேற்றேன்
ஆன்ற தமிழறிஞர், ஆராய்ச்சி மிக்கவர்கள்
சான்றோர்கள் வந்துள்ளார், தாழ்ந்து வணங்குகிறேன்

ஊமைக் கவிதைக ளோராயி ரம்மனத்தில்
சேமித்து வைத்திக்கே சேர்ந்த அவையோரே
உங்களு கென்றென் உளமார் வணக்கங்கள்.
உங்கள் செவிவாசல் எங்கள் கவிக்கோவில்
வாருங்கள் நண்பர்களே வந்து கவி தாருங்கள்
வாருங்கள் நண்பர்களே வந்து செவிதாருங்கள்
புத்தம் புதிதாகப் பூக்கும் இணையம்தான்
இத்தரையில் என்றும் இனி.
கவிமாமணி இலந்தை சு. இராமசாமி,
சென்னை