நெடிதுயர்ந்த விந்தைப் பெண்ணே!

நிலை மண்டில ஆசிரியப்பா


சோம்ப லில்லா சித்திரப் பெண்ணே;
அம்பெனப் பாய்வாய் அடுக்களை துவங்கி!
விரலின் நுனியில் விதவித ருசியும்,
குரலில் நனைவில் குளுகுளு வீச்சும்,
வீடே கோயில், வினையே மூச்சாய்,
மாடா யுழைத்து மற்றவர் போற்ற,
இடுப்பு சோர்ந்த இருப்பில் சிறிதும்,
மடிக்க இயலா மனிதக் கட்டை!
சிக்கன நங்கை, சிக்கென உடம்பு
இக்கணம் அவளுக் கேது நன்மை?
என்றும் பிறர்க்கே உழைக்கும் நீயே,
இன்றைய வீட்டின் இன்ப நங்கை!
கலைகள் அனைத்தும் கற்க வேண்டும்
மலையெனத் துன்பம் மறித்து வரினும்
நிலைத்து நின்று நிமிரவும் வேண்டும்
இலக்கண மின்றி இலக்கிய மில்லை;
இல்லா ளின்றி இல்லற மில்லை!
ஒடுக்க மில்லை அறவே யுனக்கு;
நெடித் துயர்வாய் விந்தைப் பெண்ணே!பாவலர் செ. அரிப்பிரியா,
புதுச்சேரி