தமிழிலக்கிய மின்னிதழ் வாழ்க

இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா


இணையே தமிழுக் கில்லா நிலையில்
இணைய தளத்திலும் இருப்பிடம் கொண்டோம்!
அணையும் விளக்கென ஆகிடு மென்று
கணையைத் தொடுத்தவர் கண்கள் வியக்கத்
துணைவரும் மென்பொருள் தோன்றுந் தளத்தில்
அணைக்குந் தமிழில் அழகாய் மிளிரப்
பிணைக்கு மிலக்கணம் பீடுறு செய்யுள்
இணைத்து வருமாம் இணைய தளமே!
இதழ்கள் பலவு மிருக்கும் நிலையில்
அதனில் பெரிதாய் அமைத்திட எண்ணி
எதிலுந் தமிழ்மொழி ஏற்றமே கொள்ளும்
உதய மொன்றே உன்னத மாகப்
புதிய நிலையில் புகழ்வரக் கண்டோம்!
எதற்கு முதலாய் எமது மொழியை
இதமாய் வளர்ப்பது இணைய தளமாம்;
அதனால் இலக்கிய மின்னிதழ் வாழ்க!புலவர் பூங்கொடி பராங்குசம்,
புதுச்சேரி