புதுச்சேரி - பாவரங்கப் பாடல்

இணையத்தமிழ் இலக்கியம் (எண்சீர்)


குடத்திற்கு ளகல்விளக்காய் தமிழி ளைஞர்,
     கோபுரத்தின் சுழல்விளக்காய்க் கொழிக்கச் செய்யும்
இடமாக இருக்கவேண்டும், இதய வானில்,
     இன்பஅன்பு அமைதிவழி பரப்பல் வேண்டும்
மடமைதனை வன்செயலை மனிதப் பண்பை
     மதக்கருத்தை மாய்க்கின்ற மயக்கம் நீக்கி
திடமான இணையத்தின் செயல்பா லெல்லாம்
     செந்தமிழ்நல் லிலக்கியத்தைச் செழிக்கச் செய்வோம்!

நெருப்பிற்கும் நீருக்கு மிரையாய்ப் போன,
     நெடுங்கணக்குப் பன்னூல்கள் மீண்டுந் தோன்றும்!
துருப்பிடித்துச் செல்லரித்த சுவடி யெல்லாம்
     தூசுதட்டித் தமிழிணையம் புகுத்தி விட்டால்
உருப்படியா யுலகத்தமிழ் மக்க ளின்பம்,
     உய்த்துணர்வார் இலக்கியக்கோட் பாட்டை நன்றே!
விருப்பமுடன் வெளிநாட்டார் தமிழைக் கற்க
     விழைவார்கள்; தமிழுலகை வெல்லு மின்றே!பாவலர் இளங்கோ பாண்டியன்
புதுச்சேரி