புதுச்சேரி - மின்னிதழுக்கு வாழ்த்துப் பாடல்

இனிக்கும் மின்னிதழ் (அறுசீர்)


மின்னிதழ் தன்னைக் கண்டு
.....மிக்கதோர் மகிழ்ச்சி கொண்டேன்!
இன்னினி தென்றே என்னின்
.....இயல்பதும் வளரக் கண்டேன்!
சென்னியில் தோன்று முன்னர்
.....திகழ்திரை காட்டு மென்று
துன்னியர் சொன்ன யாவும்
.....துலங்கிடக் கண்டு கொண்டேன்!

கண்மணி திறக்கு முன்னர்
.....கருத்தினை இதழ்முன் காட்டும்;
கண்ணினும் சிறப்பு மிக்க
.....கலைபல யாவுங் காட்டும்
விண்மணி கொடுக்கு முன்னர்
.....வியனுல கழகை யெல்லாம்
ஒண்ணிதழ் கொடுக்கு தென்றால்
.....உளமெலாம் இனிக்கு தம்மா!

இலக்கியம் வளர்வான் வேண்டி
.....இயக்கிடும் இணையந் தன்னால்
இலக்கினை யடைய நானும்
.....இடைவிடா துழைப்பை நல்கும்
இலக்குடை தியாக ராசர்,
.....இணையிலா இராம லிங்கர்,
இலக்கொடு இருவர் தாமும்
.....இருந்தமிழ் வாழ வாழ்கவே!கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி - 9