இந்தியாவின் இசைக்குயிலுக்கோர் இரங்கல்
(Homage to Late Tmt. M.S. Subbulakshmi, the Nightingle of India)

-:o:OOO:o:-

திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி

படம் பி.பி.சி(bbc)
-நன்றி

பிபிசி இணைய தளம்

இந்தியாவின் இசைக்குயில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைச் சுருக்கம்

          இந்திய நாட்டின் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியான திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் டிசம்பர் பனிரெண்டாம் நாள் சனிக்கிழமை இரவு, தனது எண்பத்தெட்டாவது வயதில் சென்னையில் காலமானார். சில காலமாக உடல்நலம் குன்றியிருந்த திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலன் அவரை இசையன்பர்களிடமிருந்து பிரித்துக் கொண்டு போனான்.

          திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் உடலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி இரங்கலைத் செலுத்தினார். பல தமிழக அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், மற்றும் ஏராளமான இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரும் மறைந்த இசைக்குயிலின் உடலுக்கு நேரில் வந்து இறுதி இரங்கலை தெரிவித்தனர். மேலும் அன்னாரின் மறைவுக்கு ஏராளமானவர்கள் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளனர். செம்மங்குடி சீனுவாச அய்யரிடம் இசைப்பாடம் பயின்றவரின் குரலைப் பற்றி, திரு காரைக்குடி சாம்பசிவ அய்யர் சொல்லும் போது, "குரலில் வீணையை வைத்தவர்" என்று சொல்கிறார்.

          மீரா திரைப்படம் திரையிடும் போது, இழை தொடக்கத்தில் இந்தியாவில் நைட்டிங்கேல் என்று இந்தியக் கவிஞர் திருமதி சரோஜினி நாயுடுவால் பெருமைப் படுத்தப்பட்ட, அனைவராலும் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட, மறைந்த திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினாறாம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதினாறாம் நாள் மதுரையைச் சேர்ந்த வீணைப் பரம்பரையைச் சேர்ந்த சண்முக வடிவு என்பவருக்கும் வழக்குரைஞரான திரு சுப்பிரமணிய அய்யர் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (எம்.எஸ்.எஸ்) என்று அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி அவர்கள், தனது 10வது வயதிலேயே தனது முதலாவது இசைத்தட்டை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாமாண்டு இவர் திரு சதாசிவ அய்யர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தமது காலத்தில் நான்கு திரைப்படங்களிலும் நடித்தவருக்கு, கடைசி படமான "மீரா" பெரும் புகழைச் சேர்த்தது.

          தமிழில், தெலுங்கில் மட்டுமின்றி, இந்தியாவின் பல மொழிகளில் பாடிப் புகழ் பெற்றார். மேலும் தனது பாடல் நிகழ்ச்சிகள் வழியாக நிதிகள் திரட்டி அனைத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கே அளித்து புகழ் பெற்றார். இவ்வாறான தொண்டுள்ளத்தால், பிலிப்பைன்சின் இராமன் மக்சேசாய் பட்டங்கள் போன்ற பல பட்டங்கள் இவருக்குப் பெருமை சேர்த்தன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாமாண்டு அக்டோபர் திங்கள் ஒன்றாம் நாள் உலக நாடுகள் அவையில் இவர் நிகழ்த்தியப் பாடல் நிகழ்ச்சி பெரும் புகழைச் சேர்த்தது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால், மகாத்மா காந்திஜி அவர்கள், தமது பொது வேண்டுதல் கூட்டங்களின் போது இறைப் பாடல்களை பாடுமாறு பலமுறை கேட்கப் பட்டிருக்கிறார் என்பது இவருடைய இசையின் மேன்மையைப் புலப்படுத்தும். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இந்திய நாட்டின் மிகப் பெரிய பொதுப் பட்டமான பாரத இரத்தினா அளிக்கப்பட்டு பெருமைப் படுத்தப்பட்டார். இறை வழிபாட்டில், இறைக் கொள்கையில் ஆழ்ந்த பற்று வைத்திருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக தன் வாழ்நாள் முழுதும் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி, பெரும் நிதியினை திரட்டித் தந்ததன் வாயிலாக, இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் கூட போற்றிய பேராளர் இவர்.

          இந்திய இசையுலகிற்கு இந்த இசைக்குயிலின் இழப்பு மீண்டும் நிரப்பவே முடியாத ஒரு பள்ளத்தினை விட்டுச் சென்றிருக்கிறது. அந்தக் "காற்றினிலே வரும் கீதமும்", "பஜ கோவிந்தமும்", என்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.-:o:OOO:o:-

இராச. தியாகராசன்.