பெண்ணே கேளாய் நீ!

கலி வெண்பா


பெண்ணே! அறிஞனான பித்தோகோ ரஸ்கூற்றை
நின்னிடம் இவ்விடத்தில் விண்டுரைக்கப் போகின்றேன்;
"சீரொழுங்கு, பேரொளி, ஆண்மனிதன் இம்மூன்றும்
பாரின் நலங்களென்று பட்டயத்தை நாடறிய
மேத கிறைவன் சூட்டினான். மற்றுமவன்;
தீதென் றொதுக்கினான் பின்வரும் மூன்றையே:
சூதுசூழ் தாறுமாறு, காரிருள், கோதில்பெண்!"
என்னே அறியாமை! கோதில்பெண் தீமையாம்!
அந்நாளில் பெண்ணைச் சபித்து விலங்கிட்டான்;
இந்நாளில் அவ்விலங்கை இற்றுவீழச் செய்துவிட்டோம்!
விண்ணிலும் மண்ணிலும் வீறுகொண்டு இயங்குவைநீ
எண்ணியதை எட்டிப் பிடிக்கவினி ஏதுதடை!
ஆகையால் கூனிக் குறுகி அயர்ந்திடாதே!
தோகையர்க்கு நல்லமறு வாழ்க்கை உண்டின்று!
பேரில் பழுத்தபலா வீணில் அழுக வேண்டாம்!
தேரா யசைந்தே இல்லறத்தைச் சிறக்கச்செய்!
ஆனாலும்... பேர்பெற்ற சைமோந்தெ போவுவார்
வானளாவப் பெண்ணியத் தீவிர வாதத்தைச்
சாற்றினாள்; அத்தகைய சிடுக்குப் பாதையேன்!
கற்பென்ற தீயை நலங்கெடக் கைவிடாது;
மேன்மையைப் போற்றுவை; மீயுயர்வாய் மாநிலத்தில்
மேநாட்டில் மேய்கின்ற சேய்கள் நிலைதவிர்ப்பாய்!
மக்களின் கண்களை மாயமாய்க் கட்டிவிட்டு
தக்கதிமி தக்கதிமி தைதாவென் றாடும்
ஞெகிழ்மக் குப்பையாய் எந்தமிழ்ப்பண் பாட்டை
இழிநிலைக்குத் தாழ்த்திடா தே!

------------------------
(அ) பித்தோகோரஸ் - கிரேக்கர், மெய்ப்பொருளியல், கணித அறிஞர்.
(ஆ) சைமோன் தெ போவுவார் -
பிரஞ்சு நாட்டவர், சிறந்த எழுத்தாளர்,
"Deuxieme Sexe" என்ற படைப்பின் வாயிலாக
தீவிரவாதப் பெண்ணியத்தைப் புகுத்தியவர்
ஞெகிழ்மம் - பிளாஸ்டிக்
பாவலர் செவாலியே மதனகல்யாணி சண்முகாநந்தன்,
புதுச்சேரி