புதுச்சேரி - மின்னிதழ்ப் பாவரங்கப் பாடல்

ஒளிர ஒளிரும் உலகு


மடமை விரட்டி மகிழும் விதத்தில்
கடமை புரிந்து கமழ்க இதழும்
தகவற் கொடையிற் தமிழர் படையின்
அகவல் முதலா யனைத்தும் வளர்க!
உலகத் தமிழ ரொருவர்க் கொருவர்
நலன்கள் வழங்கி நலிவைத் தடுக்க
பரந்த அறிவைப் பகரும் விதத்தில்
அரணா யுரமா யமைத்து வளர்க!
எலியின் முதுகில் இணைந்த தமிழில்
புலியி னுறுமற் பொலிவு! பொலிவு!
இனிமை யெளிமை எழிலா யமைத்து
பனியுங் கனலும் பதமாய்த் தொடுத்த
அணியி லெவரு மமிழும் வகையில்
கணினி வழியில் கமழ்க! கமழ்க!
தளிரு மறிவில் தழைக்க விதழும்
ஒளிர்க, ஒளிரும் உலகு!பாவலர் மணிமேகலைக் குப்புசாமி
புதுச்சேரி