இலக்கியச் செய்திகள் - ஏப்ரல்/மே-2005 - புதுவையிலும், இணையத்திலும்  
   
இலக்கிய நிகழ்ச்சிகள்


இராச. தியாகராசனும், கவிமாமணியும்

புதுச்சேரி - மின்னிதழ் அறிமுக விழா

இடம்: ஆறுமுகா திருமண நிலையம்
முத்தியால்பேட்டை, புதுச்சேரி
(இரேணுகா திரையரங்கு எதிரில்)
நாள்:
27.03.2005
நேரம்: மாலை நான்கு மணி
விழாக் குழுவினர்: இராச.தியாகராசன் & புலவர் செ. இராமலிங்கன்

கவிமாமணி இலந்தை இராமசாமி தலைமையேற்க, தமிழ்மாமணி மன்னர்மன்னன் விழாவினைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்ற, "தெளிதமிழ்" ஆசிரியர் - இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார், "நற்றமிழ்" ஆசிரியர் - புலவர் இறைவிழியனார், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், கலைமாமணி கல்லாடனார், "வெல்லும் தூயதமிழ்" ஆசிரியர் - பாவலர் தமிழமல்லன், மற்றும் தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவ்வமயம் "இணையத்தமிழ் இலக்கியம்" எனும் பாடுபொருளில் பாவரங்கம் நடந்தேறியது


விழா நிகழ்ச்சியின் நிழற்படங்கள் இதோ


விழா பாவரங்கப் பாடல்கள் இதோ


அறிவியல் விழிப்புணர்வு ஆண்டு நிறைவுநாள் கவியரங்கம்

அறிவியல் விழிப்புணர்வு பாட்டரங்கம்

இடம்: கம்பன் கலையரங்கம், புதுச்சேரி
நாள்:
09.04.2005
நேரம்: காலை பத்து முதல் இரவு எட்டு மணி வரை
விழாக் குழுவினர்: புதுவை அறிவியல் இயக்கம், புதுவை அறிவியல் தொழில்நுட்பத்துறை, நடுவண் அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை

கண்காட்சி, கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள், இவை நிறைந்த அறிவியல் ஆண்டு நிறைவுநாள் விழாவில், தொண்ணூறு பாவலர்கள் பங்கேற்ற "அறிவியல் விழிப்புணர்வுக் கவியரங்கம்" ஒன்றினை திரு இரா. நாகசுந்தரம் அவர்கள் ஒருங்கிணைப்புடன், புதுவை அறிவியல் இயக்கமும், அறிவியல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து நடத்தினர். ஒன்பது அமர்வுகளாக நடந்த இந்தப் பாட்டரங்கில், பாடுபொருளாக
பாவலர் மாலதி மைத்ரி தலைமையில் - நீரின்றி அமையாது உலகு
கவிமாமணி கல்லாடன் தலைமையில் - இயற்கையும் செயற்கையும்
பூங்கொடி பராங்குசம் தலைமையில் - நிலவைத் தொட்டோம் ..ஆனால்
முனைவர் த. பரசுராமன் தலைமையில் - குறையும் வளங்கள் குறையா ஆசைகள்
பாவலர் ஆ. கோவிந்தராசலு தலைமையில் - உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்
பாவலர் தமிழியக்கன் தலைமையில் - அறிவியல் பரப்புவோம்
பாட்டறிஞர் இலக்கிய தலைமையில் - கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக
வில்லியனூர்ப் பழநி தலைமையில் - அறிவியல் எனும் ஆயுதம்
பாவலர் இரா. நாகசுந்தரம் தலைமையில் - எதனால், எதனால், எதனாலோ?

பாடல்களை பாவலர்கள் யாத்தளித்தனர். தமிழார்வலர்கள் அனைவரும் கலத்து கொண்டு சிறப்பித்தனர்.


பாரதிதாசன் அறக்கட்டளை இலக்கியப் போட்டியில் திருமிகு எஸ்.பி. சிவக்குமார், ச.ம.உ., புலவர் செ. இராமலிங்கன், தமிழ்மாமணி மன்னர் மன்னன்

பாரதிதாசன் அறக்கட்டளை நிகழ்ச்சி

பாவேந்தரின் நினைவு நாள் ஏப்ரல்
21 பிறந்த நாள் ஏப்ரல் 29, இவற்றையொட்டி ப்துவை பாரதிதாசனின் அறக்கட்டளை போட்டிகள் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பாரதிதாசனின் கவிதை வரிகளின் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை நடைமுறைப்படுத்தும் முகமாக இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான தலைப்பு, "பூகம்ப லோகத்திலே தீயும் புனலும் வாழ்புவியில் மக்களுக்கிங் குழைப்பாய் இங்கு வாழ்ந்திடும் நாட்களெலாம்...". தாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட புவியதிர்ச்சி பற்றி பாரதிதாசன் பாடியுள்ளார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக குவெட்டா என்ற ஊரிலேற்பட்ட புவியதிர்ச்சியில் 50000 பேர் மாண்டனர். அப்போது எழுதப்பட்ட பாடலில் அச்சம் நீங்கி நம்பிக்கையுடன் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளளர்.
விழாவினை தொடங்கி வைத்த திருமிகு எஸ்.பி. சிவக்குமார், ச.ம.உ இளைஞர்களும், குழந்தைகளுமே நாளைய நாட்டினை உருவாக்குபவர்கள் என்றும், அவர்களை ஊக்கப்படுத்தும் அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு கோ. பாரதியவர்களின் பணி போற்றுதற்குரியதென்று பாராட்டினார். தமிழ்மாமணி திரு மன்னர் மன்னன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார். மேலும் பிரான்சு நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் ப்ரதரிக் நோயே, பேராசிரியர் கோபாலகிருட்டன், கலைமாமணி புலவர் நாகி, தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், ஓவியர்கள் திரு ஜெகதீசன், குலசேகரன், இராமசாமி, புலவர் செ. இராமலிங்கன், பாவலர்கள்: இலக்கியன், இராச. தியாகராசன், கலைமாணி முருகன், வானொலி அலுவலர் திரு கோ. செல்வம், குபேர், இராதா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த ஆண்டு கவிதை, ஓவியப்போட்டிகள் ஏப்ரல் பதினான்காம் நாள், வியாழக்கிழமை காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணிவரை நடைபெற்றன. போட்டிக்கு வேண்டிய தாள், எழுதுகோல், வண்ணம், தூரிகை ஆகியவற்றை பங்கேற்போர் தமது செலவில் கொணர்நது, நேரில் கலந்து கொண்டு படைப்பை அமைத்தனர். கவிதை போட்டி வயது வரம்பு: 15முதல் 30வரை. ஓவியப்போட்டி வயது வரம்பு: 5முதல் 30வரை. இரண்டு போட்டிகளுக்குமாக மொத்தம் பதினாறு பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி: திரு, கோ. பாரதி, எண்: எச்-ஒன்பது, காந்தி நகர், புதுச்சேரி-605009
அஞ்சலி செலுத்துகிறோம்

தமிழ்மாமணி புலவரேறு அரிமதித் தென்னகனாரின் துணைவியார் திருமதி நா. கோவிந்தம்மாள் அவர்கள் மீனம் (பங்குனி)
18 (31.03.2005) ஆம் நாள், வியாழக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் புலவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் புதுச்சேரி - மின்னிதழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


பாரதிதாசன் 115ஆவது பிறந்தநாள் விழாவில் திருமதி/திரு தமிழ்மாமணி மன்னர்மன்னன், பா.வே. செல்வராஜ், செயலர், முனைவர் முத்து, செல்வியர் ந. சுமதி, இயக்குநர், தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன், கலைமாமணி புலவர் நாகி, செவாலியே மதனகல்யாணி

புதுவைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாவேந்தர் புகழ்ப் பாட்டரங்கம்

பாவேந்தர் புகழ்ப் பாட்டரங்கம் ஒன்றினை புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, பாவேந்தர் பாரதிதாசனின்
115ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியிலிருக்கும் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தியது. அவ்வமயம் தமிழ்மாமணி மன்னர் மன்னன் அவர்கள் தலைமையேற்க, தமக்களிக்கப் பட்ட பாரதிதாசனின் கவிதை வரிகளை ஒட்டி 115 புதுவைப் பாவலர்கள் பதினாறு வரிகளில் தத்தம் சிந்தனை மலர்களால் தொடுத்த மரபுப்பா புகழ்மாலை சூட்டினார்கள். புதுவைத் தமிழார்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவில் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் பங்கேற்று, மாணவ மாணவியர்க்கு பரிசுகள் வழக்கினார். கலை, பண்பாட்டுத் துறை செயலர் திருமிகு பா.வெ. செல்வராஜ் அவர்களும், இயக்குநர் செல்வி ந. சுமதி அவர்களும் கலந்து கொண்டனர்.


கவிஞர் புதுவைச் சிவம் இலக்கிய பேரவை அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவில் அவரது திருமகனார் திரு சிவ. இளங்கோ உரையாற்றுதல்

"கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை அறக்கட்டளை இரண்டாம் சொற்பொழிவு

இடம்: கருத்தரங்க அறை, தலைமைச் செயலகம்
நாள்:
24.04.2005
நேரம்: காலை பத்து மணி
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு, பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் தலைமையில், முனைவர் ப. மருதநாயகம் இயக்குநர் வரவேற்புடன், பாவலர் சிவ. இளங்கோ நோக்கவுரையுடன், முனைவர் அ. அறிவுநம்பியின் "நாடகவாணர் சிவம்" என்ற பொருள் பற்றிய சிறப்புரையுடன், முனைவர் மு. சுதர்சனனின் நன்றியுரையுடன் இனிதே நடைபெற்றது.

பாடல் படைத்திடுக - வஞ்சிவிருத்தம்- 03
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை நங்கைமார்
தோளை நாணிலர் தோயவே! (யா.அ.க. மேற்கோள்)

(அ) ஒவ்வொரு அடியிலும் மும்மூன்று சீர்கள் இருத்தல் வேண்டும்
(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:
தேமா + கூவிளம் + கூவிளம் என்றிருக்கவேண்டும்
(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: மே திங்கள்,
31, 2005
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி -
605005.

-புலவர் அரங்க. நடராசன்

நூல் வெளியீட்டு விழா விவரங்கள்

அன்புசால் தமிழன்பர்களே! புதுச்சேரியின் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நெஞ்சில் உதிக்கும் சிந்தனை உளி கொண்டு செதுக்கிய நூற் சிலைகளைப் பற்றிய விவரங்களுக்காக தனியாக வலைப் பக்கமொன்றினை உருவாக்கி இருக்கிறோம். அந்நூல்களை தமிழன்பர்கள் வாங்கி படிப்பதற்கு ஏதுவாக படைப்பாளிகளின் முகவரிகள், தொலைபேசி/ செல்லிடப்பேசி எண்களும் தரப்படுகின்றன.
விவரமான வலைப்பக்கம் இதோ.


பாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை
பாவலர்களிடமிருந்து பாடல்கள் பெறப்பட்டு
அவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை
அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக
படிக்கப்படுமென்றும், சிறந்த பாடல்களுக்கு
பரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்
சங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்
அவர்கள் அறிவித்தார்.
படைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்ச் சங்க கட்டிடம்,
40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.
காமராசர் சங்க இலக்கிய இருக்கை
குறிஞ்சிப் பாட்டு - பன்முக நோக்கு - கருத்தரங்கம்
புதுச்சேரி அரசின் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில், புதுவை மொழியில் பண்பாட்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற குறிஞ்சிப்பாட்டு: பன்முக நோக்கு - கருத்தரங்கு நான்கு அமர்வுகளாக பேராசிரியர் ஆ.சிவலிங்கனார், நூற்கடல் தி.வே. கோபாலய்யர், முனைவர் கோ. விசயவேணுகோபால், முனைவர் க. பஞ்சாங்கம் ஆகிய தமிழறிஞர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.


அரு. கோபாலன் தமிழ் விழிப்புணர்வு மாநாட்டில் உரையாற்றுகிறார்.

தமிழ் விழிப்புணர்வு மாநாடு

புதுவை சமரச சுத்த சன்மார்க்க சங்கக் கட்டடத்தில்,
24.04.2005 ஞாயிறன்று மாலை ஆறு மணியளவில் புதுவை தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவினரின் நடத்திய தமிழ் விழிப்புணர்வு மாநாட்டில், பைந்தமிழ்ப்பாவலர் கோ.புகழேந்தி, நூற்கடல் தி.வே. கோபாலையர், முனைவர் இராச. திருமாவளவன், பாவலர் இளங்கோ பாண்டியன், பைந்தமிழ்ப்பாவலர் இரா. இளமுருகன், தமிழ்த்திரு பெ. பராங்குசம், பேராசிரியர் ம.இலே. தங்கப்பா, பேரா. அ. பசுபதி, திரு கோ. தமிழுலகன், புலவர் திரு வி. திருவேங்கடம், திரு இரா. செம்பியன், முனைவர் இரா. திருமுருகன், முனைவர் அரு. கோபாலன், புலவர் அரங்க. நடராசன், திரு சி. நாகலிங்கம், புலவர் ஆறு. அரங்கண்ணல், முனைவர் உரு. அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது. அவ்வமயம், இலக்கணச் செம்மல் சுந்தர குமரனாரின் நினைவுப்பரிசுக்குரிய இலக்கணத் தேர்வுகளில் பரிசு பெற்றவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டன. சூரிய விசயகுமாரி- துரை.மாலிறையன் அறக்கட்டளை சார்பாகவும் மாணவ மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா

புதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு
வீர வணக்கமாக
11.12.2004
அன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த
மரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்
பாடல்களூக்கான இணைப்புத்தொடர்:
மாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்

பொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்

கவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
நாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்
நோக்கவுரையுடன் கலைமாமணி நாகி,
தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம்,
திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்
புதுவைத் தமிழ்மக்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது

மேலும் விவரங்களுக்கு முகவரி:
எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி
தொலைபேசி:

செல்லிடப்பேசி:

கவிதை வானில் கவியரங்க விவரங்கள்