பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதி நமை வளர்த்தான்


பாட்டில் அருளினை அன்பினை ஊட்டியே
     பாரதி நமைவளர்த்தான் - தேன்
கூட்டில் இழிதரும் நற்சுவை கூட்டியே
     கொள்க எனவுரைத்தான் - நம்
நாட்டில் நிலவிய அடிமை ஒழித்திட
     அல்லல் பலவேற்றான் - தன்
பாட்டுத் திறத்தினால் வையம் முழுவதும்
     பாலித்திட நினைத்தான்.

எட்டுத் திக்கும் வெற்றி கொட்டுமுரசென
     யீடில் கவிபடைத்தான் - பகை
வெட்டியே வீழ்த்திட வெற்றியே சூடிட
     வீர உணர்வளித்தான் - அன்று
தட்டி எழுப்பிய விடுதலை உணர்வினால்
     தாயகம் மீட்டோமே - அவன்
சுட்டிய அருளினை அன்பினைக் கைவிட்டுச்
     சுயநலங் கொண்டோமே!கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி