புதுச்சேரி மின்னிதழைப் போற்று!

புதுச்சேரி - பாவரங்கப் பாடல்


தெளிதமிழும் நற்றமிழும் செந்தமிழைப் புதுவையிலே சிறப்பா யோதி
வளஞ்சொரியு மேடுகளாய் வண்டமிழர் வீடுகளில் வாழ்தல் போல
உளமகிழ இணையதள மின்னிதழும் பூத்ததம்மா உலகோர் காண!
களிதமிழி னிலக்கியங்கள் கற்கண்டா யினிக்குமதில் களிப்பீர் நன்றே!

அயல்நாட்டில் வாழ்வோரும் அருந்தமிழின் சுவைகாண அமைந்த ஏடாம்
நயமாக நம்தமிழின் நனிசிறப்பைப் பேசவரும் நல்ல ஏடாம்
வியன்மேவும் தமிழினத்தின் மேன்மைமிகும் பண்பாட்டை விளக்கும் ஏடாம்
வயலோரம் வாழ்வோர்க்கு மிணையதளம் செய்திகளை வழங்கும் நன்றே!

இல்வாழ்வில் குறள்நெறியை என்றென்றும் கண்போல இனிதாய்க் காக்கச்
சொல்லாலுஞ் செயலாலுந் தூய்மைசேர் பொதுமைதனைத் தோளி லேற்க
நல்லோர்க்கும் வல்லோர்க்கும் நாடெங்கும் வாழ்வோர்க்கும் நலங்கள் சூழ
எல்லோர்க்கும் இணையதளம் இன்தமிழில் இலக்கியத்தை இயம்பும் நன்றே!

புதுச்சேரி வந்தவர்க்கோ புகலிடமாய் ஆகிவிடும் புதுமை யில்லை
மதுச்சேரி என்றுபலர் வாய்கிழிய முழங்கிடுவர் வழக்கந் தானே!
கதைசொல்லிக் கிடவாமற் கவிதைகளோ மணக்கின்ற கவினார் பூமி!
புதுத்தமிழா லிணையதள மின்னிதழும் புதுவைதனிற் பொலியும் நன்றே!
பாவலர் தே. சனார்த்தனன்
புதுச்சேரி