பாவேந்தர் நினைவாக

தினந்தோறும் காண்பாய் சுகம்


ஜொலிக்கும் நெருப்பிருக்கு மோர்திசையில்; வாயால்
விளிக்கையிலே நெஞ்சம் மயங்கும் - பளிச்செனும்
வெண்மையாய்க் காணுங் குழலென்றும் வாழ்விற்கே
துன்பமெனத் தேர்வாய் தெளிந்து.

தினமொன்றாய் நான்விடுவேன் தீக்குழலின் நேசம்;
கனவிலேனும் எண்ணாதே நண்பா -மனதில்
உறுதியோடு உண்மையாய் விட்டுவிடப் பின்னால்
சுருதியான வாழ்வுன்னைச் சேரும்.

வலிக்குதே நெஞ்சகம்; வெள்ளைக் குழலைச்
சலிப்பின்றி நீயுறியும் வேளை - களிப்பில்
மனம்மாறி விட்டேனித் தீப்பழக்க மென்றால்
தினந்தோறுங் காண்பாய் சுகம்.பாவலர் கிருட்டினன் அய்யப்பன்
பெங்களூர்