புதுச்சேரி - பாவரங்கப் பாடல்

இணையத்தமிழ் இலக்கியம்


பொறியெனும் கணினியி
                  லேது - நட
                  வாது - வெறுங்
                  கோது - என்றோர்
   புரியாம லுளறிய போது - தமிழ்ப்
   பொழிலால்வரு மண்மேவெளி யுலகேதொழ நெறியாயிடம்
   புலம்பெயர்ந் துறைந்தவர் படைத்தார் - தமிழ்ப்
   நலம்பெற வழியினைத் துடைத்தார்!

பொறியிய லறிஞனைப்
                  போலே - உழைப்
                  பாலே - பல
                  நூலே - எழப்
   பொழுதெலா மலைத்ததி னாலே - யன்று
   புறமோடகம் முறையாய்வரி வழுவாதுள மணிமேகலை ப்
   பொலிகவென் றிலக்கியம் பதித்தா - ரிவர்
   தெளிதமிழ்ச் சுவையினை விதைத்தார்

செறிவா யிலக்கியந்
                  தொகுத்துப் - பிழை
                  செகுத்து - நன்றாய்
                  வகுத்து - மலைத்
   தேனெனப் பருகிட உகுத்தே - இன்று
   தெளிவாய்விரல் நுனியாலிணை தளமேதொட வினிதாய்த்தமிழ்
   சிறியதி ரையினில் விருந்தாய்த் - தரும்
   அறிவைவ ளர்க்க்கின்ற மருந்தாய்!

அறிவியல் பெற்றிட்ட
                  மங்கைத் - திரைத்
                  தங்கை - கணினி
                  நங்கைத் - தமிழ்
   அன்னைக் களித்திட்ட பங்கை - நாமும்
   அமுதத்தமி ழினையதினி லெழுதிபுவி யறியப்பல
   ஆக்கப்ப ணிகளைச் செய்வோ - மினம்
   மீட்கப்ப யன்களைக் கொய்வோம்!பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன்
புதுச்சேரி