தமிழ் இணையம்

வெண்டளையான் வந்த அறுசீர் ஆசிரிய விருத்தம்


இணையத் தளத்தினில் இன்றமி ழோங்கிய திந்நாள். அறிவின்
கணையமஃதே! அந்தமிழ் வையம் அளாவிடக் காட்டுமுயிர் நாடி
புணையாம் புதுமைக்கே! பொன்னார் தமிழ்க்குப் புதுகுருதி யோட்டம்.
பணைத்தொட் மறவர் பயந்த தமிழைப் பரப்பும் நுரையீரல்.

அணுவின தாற்றல் அருந்தமிழ்க் குண்டு அஃதறியார் தமிழுக்
கணுவளவும் ஆளு முரிமைதனைத் தாரா தடக்கிவைத் துள்ளார்
கணுமூங்கிற் புன்கோல் களிறடங்குந் தாய்மொழிக் கல்விமே லோங்கின்
துணுக்குறும் ஆங்கிலமே! தூயதமிழ்க் காட்சி துணிவா யளித்திடுமே!

அடிமையுற்ற செந்தமிழ்க் கான்ற விடுதலை தேடத் தமிழர்
வெடித்துச் சிதறி எதிர்ப்புகள் வீழ்த்தியே வெற்றி குவிக்கப்
படித்திட வேண்டுமடா; பைந்தமிழில் பல்கலைகள் பார்ப்பா யன்று!
துடித்தே யெழும்புரட்சி; தூயதமி ழாளத் துணையாம் இணையமே!

தமிழுக் குறாவாய்த் தமிழர்க் குறவாய்த் தமிழிணை யந்தான்
அமையின் அரைநொடியில் ஆளு முரிமை அருந்தமிழ்க் காகும்!
இமிழ்கடல் வேலி யுலகத் தமிழர் இணைந்தொன்றாய்க் கூடி இந்நாள்
அமிழும் தமிழின் அடிமை அறுத்தெறிவார்! ஆளுந் தமிழிங்கே!பாட்டறிஞர் இலக்கியன்,
புதுச்சேரி