ஆ. குணநாதன்,
மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா
மின்னஞ்சல்:
a_g_mala@tm.net.my

இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட மலேசியத் தமிழ் நாவல்கள் (முதல் பகுதி)


முன்னுரை:

          தமிழிலக்கிய வரலாற்றில் பல நூற்றாண்டு காலமாக செய்யுள் பெற்று வந்த இடத்தை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை எடுத்துக் கொண்டது. இன்று உரைநடையின் வளர்ச்சியில் நாவல்கள், சிறுகதைகள் வழி மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும், கதாசிரியர்கள் திறம்பட வடித்திருக்கிறார்கள்.

          மலேசியாவின் முதல் துப்பறியும் தமிழ் நாவல் என்ற கட்டுரையை எழுதிய வே. சபாபதி, தமிழ் நாவலைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"உரைநடையின் கால வளர்ச்சியில் நாவல், சிறுகதை போன்ற இலக்கியக் குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் நாவலே தலைக் குழந்தையாகும். இன்று மக்களிடையே செல்வாக்கோடு இருப்பது நாவலே. ஏனெனில், எண்ணங்களையும், கற்பனையையும் வெளீயிடக் கிடைத்திருக்கும் சிறந்த, ஒப்பற்ற சாதனம் இதுவே. எனவே, நாவல் உரைநடைக் காப்பியம் எனக் கருதப்படுகிறது."

தமிழில் நாவல் இலக்கியம்:

          1876 - ஆம் ஆண்டில் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை எழுதிய, "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற நாவலே தமிழில் முதலில் வெளிவந்த நாவலாகும். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரும்பியத் தமிழ் நாவல் முயற்சியானது, மலேசியாவில் 1917 -இல் தான் கால் பதித்தது. வெங்கடரத்தினம் என்பவர் எழுதிய, " கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி" என்ற நாவலே முதல் மலேசியத் தமிழ் நாவல் என்று குறிப்புகள் கூறுகின்றன.

போர்க்காலப் பின்னணி:

          பொதுவாகவே போர்க்காலப் பின்னணியை என்னவோ தமிழ் எழுத்தாளர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள், வியட்நாம் போர், பனிப்போர், கொரியாப் போர், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போர்கள் பற்றி மேல்நாட்டார், குறிப்பாக ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் அநேக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் படைத்துள்ளனர். ஆனால் தமிழர்கள் முழு அளவில் போர்க்காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த திரைப்படங்கள் குறைவு. தமிழ்த் திரைப்படங்களில் போர்ப்பின்னணியை முழுமையாகவோ, பகுதியாகவோ கொண்டவற்றில் சிலவற்றை பட்டியல் ஒன்று காட்டுகிறது.

  • பராசக்தி - இரண்டாம் உலகப் போர்
  • தாயே உனக்காக - இந்தியா, பாகிஸ்தான் போர்
  • பார்த்தால் பசி தீரும் - இரண்டாம் உலகப் போர்
  • இரத்த திலகம் - இந்திய, சீனப் போர்
  • இந்தியன் - இரண்டாம் உலகப் போர்
  • வீரபாண்டிய கட்டபொம்மன் - இந்திய விடுதலைப் போர்
  • சிவகங்கைச் சீமை - இந்திய விடுதலைப்போர்

          தமிழ்நாட்டு நாவல்களில் கூட "நெஞ்சினலைகள்" (அகிலன்), "காட்டாறு" (தி. ராஜூ), ஆகியவற்றில் முறையே இரண்டாம் உலகப் போர் மற்றும் ஹைதராபாத் நிஜாம் போர் ஆகியவற்றை அறியலாம். மேலும் "அன்பே அகிலா" (கல்கி - 1971) என்னும் சித்திரத் தொடர்கதை வங்கதேச விடுதலைப் போரைப் பின்னணியாகக் கொண்டதாகும்.

மலேசியாவில்......

          மலேசியாவில் போர்ச்சூழலை மையமாகக் வைத்து சிறுகதைகள் குறைவாகவே வெளிவந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில், சப்பானியர் கொடுமைகளையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், போதிய உணவில்லாத நிலையையும், சயாம் மரண இரயில்வேத் துன்பங்களையும், காட்டும் சில சிறுகதைகள் படைப்பப் பட்டுள்ளன. அவை "ஆசைமுகம் மறந்து போச்சே", "சிரஞ்சீவி வேணு", "காதலர்களின் தேச பக்தி", "விதியின் சுழல்", "மீனாட்சி", "இருண்ட உலகம்", "தாயும் மகனும்", ஆகியவையாகும்.

          எனினும் நமது எழுத்தாளர்கள் சமூகத்தில் நிலவும் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்தே கதைகள் படைக்க விரும்புகின்றனர். மேலும் வரலாற்று செய்திகளைக் கூறும்போது தவறுகள் நிகழ்ந்துவிடுமோ என்ற தயக்கமும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் பண்பட்ட எழுத்தாளர் சா. ஆ. அன்பானந்தன்
(1976), புதிய சமுதாயம் மாத இதழில் உண்மைகள் என்ற தொடர்கதையை எழுதினார். இக்கதை இரண்டாம் உலக் போரின்போது மலாயாவில் தமிழ்க் குடும்பம ஒன்றுபட்ட துயரை விளக்கும் வண்ணம் உள்ளது.

          மலேசியாவில் இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த நாவல்கள் ஆறு மட்டுமே. இதில் "மரவள்ளிக்கிழங்கு" (சா.ஆ. அன்பானந்தன்), "புதியதோர் உலகம்" (அ. ரெங்கசாமி), "சயாம் மரண ரயில்" (ஆர். சண்முகம்), "அழுதால் உன்னைப் பெறலாமே" (ப. சந்திரகாந்தம்) ஆகியவை மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. இருப்பினும், தமிழக எழுத்தாளர் ப. சிங்காரம், "புயலிலே ஒரு தோணி", (1972) , கடலுக்கு அப்பால் (1985) ஆகிய இரு நாவல்களைப் படைத்துள்ளார். இவை மலாயா - இந்தோனேசியா - தாய்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டாம் உலக் போரின்போது நடைபெற்ற சம்பவங்களை விவரிக்கின்றன.

பெயர்கள்

          இங்கே நாம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நாவல்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம். அவ்வாறு பார்க்கையில் "மரவள்ளிக்கிழங்கு", "சயாம் மரண ரயில்", ஆகியவை நேரிடையாக அந்தக் காலகட்டத்தை நினைவுபடுத்துகின்றன. "புதியதோர் உலகம்" பொதுப் பெயராகும். "அழுதால் உன்னைப் பெறலாமே" காதல் கதையாகும். இக்கதையானது கோபாலன் - மல்லிகா இருவருக்கிடையில் தோன்றும் காதலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இக்கதை மலாயாவில் சப்பானியர் ஆட்சிக் காலத்தில் நடப்பதாகக் காட்டப்படுவதால், சயாம் மரண ரயில் நிகழ்ச்சிகள் ஓரளவு சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் "சயாம் மரண ரயில்" மற்றும் "மரவள்ளிக் கிழங்கு" ஆகியவையும் சயாம் மரண இரயில் பாதை அமைக்கச் சென்று அல்லல்பட்ட தமிழர்களின் பரிதாப நிலையை விரிவாக விவரிக்கின்றன. ஆனால் "புதியதோர் உலகம்" அவ்வாறில்லாமல், தோட்டப்புறம் ஒன்றில் தமிழ்க் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை விளக்குகின்றது.

நோக்கம்

          மேற்குறிப்பிட்ட எல்லா நாவல்களிலுமே மலாயாவில் சப்பானியர் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் கொடுமைகள் காட்டப்பட்டுள்ளன. அதிலும் "அழுதால் உன்னைப் பெறாலாமே" தவிர மற்ற மூன்றிலும் பசி, பட்டினி, பஞ்சம், நோய் போன்றவற்றை விரிவாக ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர்.

          "மரவள்ளிக் கிழங்கு சோறு பயிற்றமுளை போல நீள நீளமாக சீவப்பட்டு கறி ஊற்றப்பட்டிருந்தது. அதுதான் சாப்பாடு." (மரவள்ளிக் கிழங்கு - பக் - நான்பத்தொன்பது).

          "எங்க வீட்டுக்காரரு சயாமுக்கு போனபுறம் அரைநிமிசம் அப்பனைப் பிரிஞ்சிருக்க முடியாத என் புள்ளைன்க்க் அப்பனை நெனைச்சு நெனைச்சு ஏங்கிப் போச்சுங்க. இந்த நிலைமையிலே சோத்துக்கு பஞ்சம் வந்துச்சு. தோட்டத்துல சுண்ணாம்பு அரிசினு ஒரு அரிசி கொஞ்ச நாளு கொடுத்தான். அதை ஆக்கினா வாயில மென்ன சோறுமாதிரி இருக்கும். புள்ளைங்க அதை தொட்டுக்கூட பார்க்கிறது இல்லை." ( புதியதோர் உலகம் - பக் - நூற்றெண்பத்திரண்டு )


          இதைப் போலவே மற்ற நாவல்களிலும் உடைப் பஞ்சம், நோய் பற்றிய விவரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அன்றைய மலாயா மக்கள் சாக்குகளைப் கொண்டு (கோணி) தங்களது மானத்தை மறைத்து வாழந்தனர் என்றும், மருத்துவமனைகளில் மருந்துகளுக்குப் பஞ்சமென்றும் இக்கதைகளில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.

நாவல்களின் விவரங்கள்

          "சயாம் மரண ரயில்" என்ற நாவல் 1993 - இல் ஆர். சண்முகம் என்பவரால் எழுதப்பட்டதாகும். மொத்தம் 436 பக்கங்கள்; 51 அத்தியாயங்கள் உள்ளன. இதில் மூன்றாவது அத்தியாயம் தொடங்கி பத்தாவது அத்தியாயம் வரை சயாம் நோக்கிச் சொல்லும் இரயிலில் பிரயாணம் பற்றிய கதை உள்ளது. "மரவள்ளிக் கிழங்கு" என்ற நாவல் 1979 -, இல் நூல் வடிவில் வெளிவந்தது. இதனை சா. ஆ. அன்பானந்தன் எழுதியுள்ளார். மொத்தம் 68 பக்கங்கள்; பத்து அத்தியாயங்களிக் கொண்டது இந்நாவல். "புதியதோர் உலகம்" என்ற நாவல் 1993 - இல் அ. ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்டது. மொத்தம்299 பக்கங்களைக் கொண்டது; முப்பத்துநான்கு அத்தியாயங்கள் உள்ளன. "அழுதால் உன்னைப் பெறலாமே" என்ற நாவல் 1971 - இல் தமிழ்நேசனில் தொடர்கதையாக வந்ததாகும். இது 1976 -இல் நூல் வடிவில் வெளி வந்தது. இதனை எழுதியவர் ப. சந்திரகாந்தம். மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன. இதில் ஆறாவது அத்தியாயத்தை வெறியாட்டம் என்று அவர் தலைப்பிட்டுள்ளார். இந்த அத்தியாயத்தில் இரண்டாம் உலகப் போர்ப் பின்னணி மற்றும் சயாம் மரண இரயில் சம்பவங்கள் வருகின்றன.

          இந்நாவல்கள் யாவும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவையாகும். இருப்பினும், நமக்கு அக்கால கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள், நடைமுறைகள், பேச்சு வழக்கு, போன்றவற்றை தருவதில் நாவலாசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

கதைப் போக்கு:

(அ) மரவள்ளிக் கிழங்கு:

          வலுக்கட்டாயமாக சயாம் மரண இரயில் பாதை போட்ட சப்பானியர்களால் கொண்டுச் செல்லப்படுகிறான் மாரிமுத்து. அவன் மனைவி சீனியம்மாள், மகன் கண்ணன் ஒரு கைக்குழந்தை. சிங்காரன் என்பவன் மேல் மாரியாத்தா அருள் வந்ததால், அவனை சப்பானியர் விட்டு விடுகின்றனர். கான்புரி என்ற இடத்தில் சப்பான்காரனின் பட்டாக்கத்தி மாரிமுத்துவின் வலது கரத்தைத் துண்டிக்கிறது. தவறுதலாக மாரிமுத்துவின் கரத்தைத் துண்டித்த நீக்கோ என்ற சப்பானியன், அதற்காக வருத்தமுற்று அவனுக்கு குருதோ (கங்காணி) பதவியைத் தருகிறான். இந்நிலையில் தோட்டத்தில் சிங்காரம், சீனியம்மாளுக்கு பலவழிகளில் உதவுகிறான். ஊரோ அவர்களைப் பற்றி ஒருமாதிரியாகப் பேசுகிறது.

          சயாமில் மாரிமுத்துவின் பதவி உயர்வு கண்டு பொறுக்க முடியாத மற்றொரு குருத்தோவான முருகப்பன், ஊர் திரும்பி வந்து மாரிமுத்து இறந்துவிட்டதாக சிங்காரம் சீனியம்மாள் ஆகியோரிடம் பொய் சொல்லுகிறான். சிங்காரமும் சீனியம்மாளும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர். சப்பானியர் சரணடைந்த பின்னர், மாரிமுத்து திரும்பி வருகிறான். சிங்காரம் தன் கடமை முடிந்து விட்டதாகக் கூறிவிட்டு சென்று விடுகிறான். மாரிமுத்துவும் சீனியம்மாளும் சேர்ந்து வாழ்கின்றனர்.

          இந்நாவல் உரையாடலுடன் தொடங்குகிறது, " டேய், மாரிமுத்து.... இன்னும் என்னடா கெஞ்சிகிட்டுருக்கிற. இம்.... கிளம்பு... கிளம்பு... சப்பான் துரை வரப்போறாரு." கதவைப் படார் படாரென்று அடித்துக் கத்தினார் நாகப்பன் கங்காணி. இந்நாவலில் ஆசிரியர் பல உவமைகளையும் புதிய பாணியில் அள்ளித் தெளித்துள்ளார். அவை கதையோட்டத்திற்கு மேலும் சிறப்பைத் தருகின்றன. எடுத்துக் காட்டாக, "பிரேக் அறுந்த வண்டி போல", "டொரியான் குவியல் விற்று முடிந்ததைப் போல", "மூட்டையைத் தூக்கியெறிவது போல", "பாவடையைச் சுற்றி வருவது போல....", இவ்வாறு கதை முழுவதும் பல உவமைகள் உள்ளன. இந்நாவலில் கதை சுங்கை காப்பித் தோட்டத்திலும், சயாம் மரண இரயில் பகுதியிலும் நடைபெறுவதாக உள்ளது. நாவலில் சப்பானிய மொழி சில இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்குத் தமிழில் விளக்கமும் கதையின் ஊடே தரப்பட்டுள்ளது. கதை மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பாக செல்கிறது. ஆசிரியர் தேவையில்லாத விஷயத்தையோ, கிளைக் கதையையோ புகுத்தாமல் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இந்த நாவல் துயரமும், பழி பாவத்திற்கு அஞ்சாத கொடுங்கோன்மையையும் தலை விரித்தாடிய சப்பானியர் ஆட்சிக் காலத்தைக் காட்டுகிறது. அக்கால கட்டத்தில் தோட்டப்புறம் மக்களின் பேச்சு வழக்கு, நடைமுறை, பழக்க வழக்கங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

(ஆ) புதியதோர் உலகம்:

          இந்நாவலில் வருபவர் கருப்பையா கங்காணி. அவரையும், தோட்ட மக்களையும் சப்பானியரிடம் சயாம் மரண இரயில் பாதை போட ஆள் பிடித்துக் கொடுக்கிறார், அத்தோட்டத்து கிராணி. இருப்பினும், இரயிலில் சயாம் போகும் போது கருப்பையா தைப்பிங்கில் தப்பி மீண்டும் தோட்டத்திற்குச் (எஸ்டேட்) செல்லாமல் அருகிலிருக்கும் கம்பத்திற்கு சென்று வாழ்கிறார். அங்கே நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுமே கதையை நகர்த்திச் செல்கின்றன. இக்கதை முழுவதுமே பேச்சு வழக்கிலேயே உள்ளது. ஒவ்வொரு அத்தியாயதிற்குமான தலைப்பு கூட அவ்வாறே உள்ளது. (எ-கா) (அ) சப்பான்காரன் வரப் போறான்(பக்கம்: ஒன்பது), (ஆ) கோலாவுலே குண்டு போடறான் (பக்கம்: பத்தொன்பது), (இ) படுத்த பாயைச் சுருட்டிக் கிட்டு ஓடிட்டான் துரை ( பக்கம்: இருபத்தெட்டு).

          இந்நாவலின் கதை கோலாக்கிள்ளான், பண்டமாரன், துலுக்குஞ்சான் பகுதிகளில் நடைபெறுவதாக உள்ளது. சப்பானியர் ஆட்சிக்காலத்தில், நடைபெற்ற கொடுமைகள், பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை விலாவாரியாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுவது போல, ஆங்காங்கே பல கிளைக் கதைகள் உள்ளன. (எ-கா) அய்ந்தாவது அத்தியாயமான சப்பான்காரங்க எங்க சைக்கிளைப் புடுங்கிட்டானுங்க (நல்லத்தம்பியின் அனுபவம்), பத்தாவது முதல் பனிரெண்டாவது அத்தியாயம் (கருப்பையா கங்காணி இரயிலில் தப்பி வந்த கதை), பதினாறு முதல் பதினெட்டாவது அத்தியாயம் (காட்டுப் பன்றி வேட்டையாடச் சென்ற சங்கிலி, காத்தான், வேலு, கங்காணியின் கதை), இருபது முதல் இருபத்தொன்றாவது அத்தியாயம் பாதிவரை (நெடும்பியின் கதை), இருபத்தொன்பது முதல் முப்பத்தொன்பது அத்தியாயம் பாதிவரை (கருப்பையா கங்காணிக்கா நாட்டு வைத்தியரைத் தேடிப்போன காத்தான், வேலு ஆகியோரது கதை) என உள்ளன.

          நாவலாசிரியர் மிகவும் நேர்த்தியாகக் கதையை பல முக்கிய விஷயங்களோடு கொண்டு செல்கிறார். இடையிடையே கதாமாந்தர் வழி நாட்டு வைத்திய முறைகளையும் குறிப்பிடுகிறார். (எ-கா) அத்தியாயம் பத்தொன்பது - (கருப்பையா கங்காணி கிராணிக்குச் செய்யும் பச்சிலை வைத்தியம்), இருபத்துமூன்றாவது அத்தியாயம் - (தெலுக்குஞ்சான் தேயிலைப் பிரட்டுப் பெண்ணுக்குக் கங்காணி செய்யும் வைத்தியம்), அத்தியாயம் இருபத்தொன்பது - (பாம்பு கடிபட்ட கங்காணிக்கு பாக்கியம் செய்யும் நாட்டு வைத்தியம்) என நாட்டு வைத்திய முறைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

முதல் பகுதி முற்றும்.
இரண்டாம் பகுதி ஏப்ரல் திங்களில் வெளிவரும்


-:o:O:o:-