பாவேந்தர் நினைவாக

புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோம்


தேசத்தின் வளமதனை சுருட்டுகின்ற தீயவர் போல்
தேகத்தின் நலமதனை சுருட்டுகின்ற வெண்சுருட்டே - நீசமுள்ள
நாகத்தின் நஞ்சுபோல் நுனிநாக்கில் நெருப்பேந்தி
நாசத்தின் வாசலுக்கு நகர்த்துகின்றாய் நண்பரையே!

கவலை என்பார்உனை கைப்பிடித்த காரணத்தையே!
அவலை நினைத் துரலையே இடிப்பாருண்டோ… - எவரும்
தீவலையில் வீழ்ந்து திரும்பிடவே இயலாமலே
தவணையிலொரு கொள்ளியினைத் தனக்கே வைப்பாரோ..?

தீப்பழக்கம் அல்ல இது புகைப்பழக்கம் என்பாருண்டு
தீக்கு வழக்கம் புகையாய் தன்னைத் தொடங்குவதே - ஆக்கமின்றி
தேக்கமுறுமே தேக நலனுடன் தேடிடும் பொருளும்
தூக்கமி ல்லாத முகத்தைப் போல் முதுமைத் தோற்றம்.

சிந்திக்கப் புகைப்பாரும் சிந்தித்தால் புகைப்பாரோ....
நிந்தித்து என்னபயன் நோய் வந்த பின்னாலே - எந்திக்கும்
ஏதுமில்லை ஒரு குரலும் புகையினைப் போற்றி
ஆதலினால் புகை மறப்போம் ஆனந்தம் கொள்வோமே!

பாவலர் பக்ருதீன்,
பறங்கிப்பேட்டை