இணையதளம் வாழ்க!

புதுச்சேரி - பாவரங்கப் பாடல்


ஞாலமெலாம் ஒளிபெறவே ஒப்பில்லா நூல்கள்
உலாவரவே செய்தார்கள் நிலவுலகி லன்று!
நாளையெலாம் அவைநிலைத்து மக்களுக்கு நன்மை
நல்குமென எண்ணியவர் நெஞ்சுநடுங் கிடவே
வேலையெலாம் பொங்கிவந்து விளையாடி நந்தம்
விளைதமிழின் செல்வத்தைக் கொள்ளையிட மீண்டும்
காலையெழும் செழும்பரிதி போலவந்து தமிழர்
களிப்புறவே தோன்றியுள்ள இணையதளம் வாழ்க!

கறைப்படுத்தி எந்நாளும் கலக்கமுற வைக்கும்,
கருத்தற்ற கொள்கைகளை வெறுத்தொதுக்கித் தள்ளி,
மறைப்புறவே நந்தமிழ்த்தாய் மாண்புகளைச் சாய்த்து,
மாற்றாரின் அடியின்கீழ் மண்டியிடா வாறு
முறைப்படுத்தி வைத்தவள்தன் முன்னேற்ற மெண்ணி
மூதறிஞ ருழைப்பாலே தீதறவே தோன்றிச்
சிறைப்படுத்தி வைக்காமல் செழுந்தமிழ்தா யெங்கும்
சென்றுவரச் செய்கின்ற இணையதளம் வாழ்க!
புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி