பாவாணர் வாழ்வு பண்புறு பாடம்


யாது மூரே! யாவருங் கேளிராய்த்
தீதில் வாழ்வில் திளைத்த தமிழரைத்
தீயோர் புகுந்தே திசைமாற் றினரே!
மாயச் செயலால் மடைய ராக்கினர்!

கன்னித் தமிழைக் கலவை யாக்கினர்
கன்னற் சுவையைக் கசப்பெனக் கூறினர்
அரசியல் மன்றிலும் அறங்கூ றவையிலும்
தரமிலா மொழிக்குத் தந்தன ரிடமே!

மறைமலை முதலா மாண்புறு புலவர்
கறையிலா துழைத்த கவினுறு வழியில்
பல்துறை வல்லுநர் பாவாணர் வந்தார்
சொல்லின் வேரும் சுவைமிகு பொருளும்

நன்கு கூறினார் நடுங்கினார்ப் பகைவர்
பன்மொழி யறிவால் பயனுறு ஆய்வால்
பழந்தமிழ் மொழியே பார்முதன் மொழியென
அழகா யுலகுக் கடுக்கிக் காட்டினார்!

மாந்தன் பிறந்தகம் மகிழுறு குமரியென்
றேந்திய கொள்கையால் எழிலுற விளக்கினார்
கோதி லாய்வில் குலந்தனர் பகைவர்
வாதிட அஞ்சினர் வாலைச் சுருட்டினர்!

மொழிநூ லாயினும் முழுதும் உரைத்தார்
வழுவினைக் கண்டிடின் வன்மையாய்ச் சாடினார்
வடமொழி தமிழிடம் வாங்கிய கடனைத்
திடமுடன் தெளிவாய்த் திரட்டித் தந்தார்!

தமிழர்த் திருமணம் தமிழர் விளையாட்டு
தமிழர் வரலாறு தமிழின் வரலாறு
தமிழ்மொழி யிலக்கணம் தகவாய்த் தந்தார்
அமிழ்தம் அவையென அழகாய் விளக்கினார்!

வண்ணனை மொழிநூல் வழுவியல் தன்னைக்
கண்ணில் தெளிவாய்க் கருத்துடன் காட்டினார்
இசைத்தமிழ் இலக்கணம் இன்னிசைக் கோவை
அசைவிலா உழைப்பால் அவர்தரு செல்வம்!

அகர் முதலியி லடைந்துள கேடுகள்
பகர்ந்திட ஒருநூல் படைத்தார் பாமகன்
எளியர்; ஏழ்மையில் என்றும் துவண்டும்
வளமிகு கல்வியை வாழ்வினில் கற்றவர்!

வருவாய் உழைப்பு வளத்தை யெல்லாம்
விருப்புடன் தமிழ்மொழி வீறுறத் தந்தவர்
செருக்குடை யார்க்குச் சிறிதுந் தாழா
திருக்குந் தமிழ்க்கே உயர்தலை தாழ்ந்தவர்!

பதவி பெரிதிலை பைந்தமிழ் பெரிதென
உதறித் தள்ளினார், உய்வளி பதவியை
பாவாணர் வாழ்வு பண்புறு பாடம்
காவலர் அவரெனக் கருதி வாழ்ந்தால்!

பட்டம் பெறவும் பதவி பெறவும்
கொட்டிக் கொடுக்குங் குவியற் பெறவும்,
கொண்ட கொள்கையைக் குழியிற் புதைக்கும்
மிண்ட ரழிவர்! மீண்டிடுந் தமிழே!

தமிழும் வாழும் தமிழரும் வாழ்வர்;
அமிழதாய் யுலகி லமைதி நிலவுமே!
புலவர் மு. இறைவிழியன்.