நன்றிப் பாடல்


நூற்றாண்டு விழாவினிலே பாவா ணர்தம்
  நுவலரிய ஆய்வுகளைப் பாட லாக்கிப்,
போற்றுதலுக் குரியோர்முன் பாடிக் காட்டிப்
  பொன்றாத புகழ்பெற்ற பாவ லர்காள்

ஏற்றிடுக என்நன்றி வளர்க! வாழ்க!
  எழிற்பாடல் படைத்திடுக நாளும் நன்றே
ஏற்றமிகு இடந்தந்த வடலூர் வள்ளல்
  எண்ணரிய கொள்கைவழித் தொண்டர் வாழ்க!

தகவுடைய நாவைசிவம் தலைமை ஏற்றுத்
  தக்கநெறி காத்தார்காண் அவர்க்கு நன்றி!

இகவாழ்விற் கொடுநோயாம் பசியைப் போக்க
  இனியர்சச் சிதானந்தம் விருந்த ளித்தார்
பகலவன்போற் பணிபுரிந்த இராம லிங்கன்
  பம்பரமாய்ச் செயல்புரிந்த மாண வர்கள்!
அகமெல்லாம் மகிழ்வோங்கச் சுவைத்த சான்றோர்
  அனைவர்க்கு(ம்) அடியேனின் நன்றி! நன்றி!

புலவர் மு. இறைவிழியன்.