நூல் தொகுப்புப் பாடல்


நற்றமிழ் நடத்திய நம்மொழி ஞாயிறு
  நற்பா வாணரின் நறுநூற் றாண்டில்,
பாவலர் பாடிய பாடலை யெல்லாம்
  காவல் செய்திடக் கருதிய தாலே

நூலெனத் தொடுத்தோம்! நும்மிட மளித்தோம்
பாலைப் பிரித்துப் பருகிய அன்னமாய்
நிறையும் குறையும் நீக்கி யுணர்ந்து
மறையா தெமக்கு மடலை விடுக்க!
பின்தொகு நூலைப் பிழையிலா தாக்கிட
நன்குத விடுமே! நன்றி யுமக்கே!

சிறந்த நூலாய் சீர்பெறச் செய்த
  அறம்புரி அகத்தியர் அச்சகப் பொறுப்பினர்
இளம்பூ ரணர்க்கும் இனிய நன்றி
  உளம்நிறை மகிழ்வுட னுரைத்தோம் ஏற்க!

புலவர் மு. இறைவிழியன்.
புலவர் செ. இராமலிங்கன்.