புதுச்சேரி - பாவரங்கப் பாடல்

இணையத்தமிழ் இலக்கியம் (வெண்பாக்கள்)


அவை வணக்கம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரமண்ணில் தேன்கலந்தே
விழைவுடன் சுவைக்கு மிலந்தையார்
வீரத் தமிழ் மறவ ரிவரோ!
விரைவுக் கவிபாடு மரிமா!
விளங்கு மிவர்தமிழ் அருமையம்மா!
விளைபயன் முத்தமிழை - நன்றாய்
விண்ணளவு உண்ட இணைய
விரிபுகழ் "இலந்தை இராமசாமி" எனும்
வளமான தலைமைக்கு வணக்கம்!
"என்பா வெண்பா"இணையத்தமிழ் இலக்கியம்
புதுச்சேரி காண்பதெலாம் புத்தொளியே நாளும்
புதுமை பலபடைக்கு மூரிதே வாழ்க!
புதுச்சேரி மின்னிதழைப் பெற்ற அரசர்
புதுப்பக்க மானார் பொலிந்து!

முடியுடைய வேந்தரிடை முத்தமிழாய் வாழ்ந்த
நெடியமொழி யன்றே நிலங்கள் படர்ந்து
கொடைகுணமாய் நீள்கிறதே கார்காலப் பூப்போல்
நடைபோடு நற்றமிழே நீ!

இணையத் தமிழின்றே இன்பஞ்சேர்க் கத்தான்
அணைபோற் தடுத்தா ரகன்றோடு கின்றார்
அறிவியலார் பெற்ற அழகுமின்னி தழ்ச்சீர்
அறிந்தே இணைநல் லழகு!

சுண்டெலிக்குக் காலமிது சுட்டுகின்ற தன்மைக்கே
விண்வழியே தொண்டு வரும்நற் படைப்பதனை
மண்ணில் தழைத்த தமிழின் பெருமைதான்
விண்ணைப் பிளக்கும் விரிந்து!

செந்தமிழின் தேன்சுவையை சிந்துகின்ற தேன்குடம்போல்
வந்தடைந்த செல்வமெலாம் வாரித் தருகிறதே
முந்துபுகழ் பொற்கிழியாய் மின்னிதழின் புத்தாட்சி
வந்ததுபார் வற்றா வளம்!

சங்கப் பலகையில் சான்றோர் அமர்ந்திருந்தே
பொங்கு தமிழ்ப்பனுவல் பற்பலவே தந்திட்டார்;
பாங்குறவே வந்த கணினி விசைப்பலகை
தாங்கிடுதே தாய்த்தமிழைத் தான்!கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி