புள்ளி விவரங்கள்

புதுக் கவிதை


கொல்லன் பட்டறையில்,
தழல் நடுவில் ரோசாவாம்!
உலகில் பெண்களெனும் பூக்கள்,
கசங்குவதும் கணக்கில்லை;
கருகுவதும் கணக்கில்லை!

சமுதாயச் சங்கிலியில் -
ஆணினம், பெண்ணினம்
அனைவருமே பொது தானே!

ஆனால்.....
அடக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும்,
பெண்மையின் உணர்வுகள் மட்டுமே!
காயங்களூம், வடுக்களும் அவர்களுக்கே உரிமை!

பெண்ணுக்கு விடுதலை;
பெயரளவில் பாதி;
பேரிழப்புகளே மீதி!

சோதனைகள் தாண்டி,
வேதனைகள் பலகடந்து,
பெண்மையின் வெற்றிகள் பலவாயினும்,
இவையெல்லாம்....
சமுதாயச் சிக்கலெனும் சகதியிலே மாட்டி,
சக்தியிழந்து போகும் மிக விரைவில்!

நம் நாட்டில்...
26 மணித்துளிக் கொருமுறை
அவமானப்படுத்தப் படுவது ஒரு பெண்!
54 மணித்துளிக் கொருமுறை
பாலியல் வன்முறைக்கு ஆளாவது ஒருபெண்!
10 மணித்துளிக் கொருமுறை
எரிக்கப் படுவதோ மணப் பெண்!
7 மணித்துளிக் கொருமுறை
குற்றவாளியாய் ஆக்கப்படுகிறாள் ஒருபெண்!

இணைய விவரங்களாய் இந்தியாவின் தரமிதுவோ!
புள்ளிவிவரங்கள், புண்படுத்துவது நம்மனதை;
முகச்சுழிப்பொடு சொன்னால் இருபத்துமூன்று விழுக்காடாய் முதலிடத்தில் சென்னையாம்!

இனியாகிலும்..
தீய்ந்து போகின்ற திரியாய் இல்லாமல்
தழலொத்த கதிரெனவே விசை கொள்வோம்!
நெகிழ்வான பொழுதில் கூட திடமாய் நிமிர்ந்திருக்க;
நெஞ்சகத்தை பயிற்றுவிப்போம்!
தீயொத்து கிளர்ந்தெழும் வீரவுணர்வு கொள்வோம்!

நாளைய மலரும் நறுமுகைகளுக்கு
நல்லதோர் வழிகாட்டி என்றிருக்க;
காலமெல்லாம் இளங்கலங்களுக்கு,
கலங்கரை விளக்கென்றே ஒளிவீச!
உலக மகளிர் நாளிலின்று
சூளுரை ஏற்போம்!பாவலர் செல்வி எஸ். அருணா
புதுச்சேரி