பாவேந்தர் நினைவாக

வெண்சுருட்டா... வேண்டாமே!


ஆண்மைதனை யழித்துவிடும்; நுரையீ ரற்குள்
அண்டுகின்ற புகையதனால் இருமல் தோன்றும்
தூண்போன்ற உடலிளைக்கும்; காச நோயின்
தொழுவமென மாறிவிடும் மார்புக் கூடு
ஊண்மறுக்கும்; உறக்கத்தைக் கெடுத்துக் கொல்லும்
ஒழியாத சளித்தொல்லை ஒட்டிக் கொள்ளும்
காண்பவர்கள் அருவருப்பார்; ஒதுங்கிப் போவார்
கணப்பொழுதும் வெண்சுருட்டைப் புகைக்காதீர்கள்!

காயாத உதடிரண்டும் காய்ந்து வற்றிக்
கருநிறமாய் மாறிவிடும்; குழியும் கன்னம்
மாயாதப் புற்றுநோய் வந்து தாக்கும்
மகிழ்ச்சியெங்கோ பறந்துவிடும்; துன்பஞ் சேரும்
வாய்திறந்தால் முடைநாற்றம் வந்து வீசும்
வனப்பழியும்; கண்பார்வை மங்கும்; உம்மைப்
பாயோடு கிடத்திவிடும் வெண்சு ருட்டைப்
பகட்டுக்கும் புகைக்காதீர் செத்துப் போவீர்!

வெண்சுருட்டில் நீவைக்க வில்லை தீயை;
விரிந்தஉன் வாழ்நாள்மேல் தீவைக் கின்றாய்!
பண்மருட்டும் மொழிநல்லாள் உன்றள் இல்லாள்
பதறியழ அவள்நெஞ்சில் தீவைக் கின்றாய்!
கண்ணெனுமுன் பிள்ளைகளின் வாழ்வில் வாழும்
கடிமனையில் அழிவதற்குத் தீவைக் கின்றாய்!
உண்மையிதை உணராமல் வெண்சு ருட்டை
உதட்டிடையில் வைத்துநெருப் பூட்டல் நன்றோ!


புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி