இலக்கியச் செய்திகள் - ஏப்ரல்-2005 - புதுவையிலும், இணையத்திலும்  
   
இலக்கிய நிகழ்ச்சிகள்


இராச. தியாகராசனும், கவிமாமணியும்

புதுச்சேரி - மின்னிதழ் அறிமுக விழா

இடம்: ஆறுமுகா திருமண நிலையம்
முத்தியால்பேட்டை, புதுச்சேரி
(இரேணுகா திரையரங்கு எதிரில்)
நாள்:
27.03.2005
நேரம்: மாலை நான்கு மணி
விழாக் குழுவினர்: இராச.தியாகராசன் & புலவர் செ. இராமலிங்கன்

கவிமாமணி இலந்தை இராமசாமி தலைமையேற்க, தமிழ்மாமணி மன்னர்மன்னன் விழாவினைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்ற, "தெளிதமிழ்" ஆசிரியர் - இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார், "நற்றமிழ்" ஆசிரியர் - புலவர் இறைவிழியனார், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், கலைமாமணி கல்லாடனார், "வெல்லும் தூயதமிழ்" ஆசிரியர் - பாவலர் தமிழமல்லன், மற்றும் தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவ்வமயம் "இணையத்தமிழ் இலக்கியம்" எனும் பாடுபொருளில் பாவரங்கம் நடந்தேறியது


விழா நிகழ்ச்சியின் நிழற்படங்கள் இதோ


விழா பாவரங்கப் பாடல்கள் இதோ


பாரதிதாசன் அறக்கட்டளை இலக்கியப் போட்டியில் திருமிகு எஸ்.பி. சிவக்குமார், ச.ம.உ., புலவர் செ. இராமலிங்கன், தமிழ்மாமணி மன்னர் மன்னன்

பாரதிதாசன் அறக்கட்டளை நிகழ்ச்சி

பாவேந்தரின் நினைவு நாள் ஏப்ரல்
21 பிறந்த நாள் ஏப்ரல் 29, இவற்றையொட்டி ப்துவை பாரதிதாசனின் அறக்கட்டளை போட்டிகள் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பாரதிதாசனின் கவிதை வரிகளின் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை நடைமுறைப்படுத்தும் முகமாக இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான தலைப்பு, "பூகம்ப லோகத்திலே தீயும் புனலும் வாழ்புவியில் மக்களுக்கிங் குழைப்பாய் இங்கு வாழ்ந்திடும் நாட்களெலாம்...". தாம் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட புவியதிர்ச்சி பற்றி பாரதிதாசன் பாடியுள்ளார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக குவெட்டா என்ற ஊரிலேற்பட்ட புவியதிர்ச்சியில் 50000 பேர் மாண்டனர். அப்போது எழுதப்பட்ட பாடலில் அச்சம் நீங்கி நம்பிக்கையுடன் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளளர்.
விழாவினை தொடங்கி வைத்த திருமிகு எஸ்.பி. சிவக்குமார், ச.ம.உ இளைஞர்களும், குழந்தைகளுமே நாளைய நாட்டினை உருவாக்குபவர்கள் என்றும், அவர்களை ஊக்கப்படுத்தும் அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு கோ. பாரதியவர்களின் பணி போற்றுதற்குரியதென்று பாராட்டினார். தமிழ்மாமணி திரு மன்னர் மன்னன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார். மேலும் பிரான்சு நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் ப்ரதரிக் நோயே, பேராசிரியர் கோபாலகிருட்டன், கலைமாமணி புலவர் நாகி, தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், ஓவியர்கள் திரு ஜெகதீசன், குலசேகரன், இராமசாமி, புலவர் செ. இராமலிங்கன், பாவலர்கள்: இலக்கியன், இராச. தியாகராசன், கலைமாணி முருகன், வானொலி அலுவலர் திரு கோ. செல்வம், குபேர், இராதா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த ஆண்டு கவிதை, ஓவியப்போட்டிகள் ஏப்ரல் பதினான்காம் நாள், வியாழக்கிழமை காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணிவரை நடைபெற்றன. போட்டிக்கு வேண்டிய தாள், எழுதுகோல், வண்ணம், தூரிகை ஆகியவற்றை பங்கேற்போர் தமது செலவில் கொணர்நது, நேரில் கலந்து கொண்டு படைப்பை அமைத்தனர். கவிதை போட்டி வயது வரம்பு: 15முதல் 30வரை. ஓவியப்போட்டி வயது வரம்பு: 5முதல் 30வரை. இரண்டு போட்டிகளுக்குமாக மொத்தம் பதினாறு பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி: திரு, கோ. பாரதி, எண்: எச்-ஒன்பது, காந்தி நகர், புதுச்சேரி-605009
வெல்லும் தூயதமிழ் சிற்றிதழின் சிறுகதைப் போட்டி

பிறமொழிச் சொற் கலவாத குமுகாயக் கதைப் போட்டியினை "வெல்லும் தூயதமிழ்" சிற்றிதழ் அறிவித்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
27.04.2005 முதல் பரிசு: உருவா ஆயிரம். கதைகளுக்கான நெறிமுறைகள் வருமாறு:-

  • கடைசிநாள்: ஏப்பிரல் மாதம் இருபத்தேழாம் நாள்.
  • ஆறு பக்க அளவு. எழுதுந் தாளில் ஒரு பக்கம் மட்டிலுமே எழுதவேண்டும். மறுபக்கம் எழுதல் கூடாது.
  • வெற்றுத் தாள்களையே பயன்படுத்தல் வேண்டும். முகவரி அச்சிட்ட தாள் கூடாது.
  • தலைப்புக்குக் கீழே பெயரை எழுத வேண்டா. தனித்தாளில் முகவரி இணைக்கவும்.
  • பிறமொழிச் சொற்கள் கலவாத குமுகாயக் கதைகள் வேண்டும்.
  • கதைக் கேற்ப ஓவியங்கள் வரைந்து அனுப்பலாம்.
  • அனுப்ப வேண்டிய முகவரி: வெல்லும் தூய தமிழ், எண்:
    64, மாரியம்மன் கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி - 605009 இந்தியா.
புதுவைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாவேந்தர் புகழ்ப் பாட்டரங்கம்

பாவேந்தர் புகழ்ப் பாட்டரங்கம் ஒன்றினை புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, பாவேந்தர் பாரதிதாசனின்
115ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியிலிருக்கும் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தவுள்ளது. அவ்வமயம் பாரதிதாசனின் கவிதை வரிகளள ஒட்டி 115 புதுவைப் பாவலர்கள் பதினாறு வரிகளில் தத்தம் சிந்தனை மலர்களால் தொடுத்த மரபுப்பா புகழ்மாலை சூட்டுகிறார்கள். தமிழார்வலர்கள் அனைவரும் வருக வருகவென வரவேற்கப் படுகிறார்கள்.


புதுவை கந்தசாமினின் "பசி" நூலை திருமிகு க. இலட்சுமி நாராயணன், ச.ம.உ வெளியிட, பாட்டாளி மக்கள்கட்சி மண்டல அமைப்பாளர் திரு இரா. அனந்தராமன் முதல்படி பெறுதல்

"பசி" - நூல் வெளியீட்டு விழா

இடம்: வேல் சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி
நாள்:
02.04.2005
நேரம்: மாலை ஆறு மணி
சமூக உணர்வாளர் திரு பெ. பராங்குசம் தலைமையில், முனைவர் அரங்க. முருகையன் முன்னிலையில், திருமிகு க.இலட்சுமி நாராயணன் ச.ம.உ, திருமிகு நீல. கங்காதரன் ச.ம.உ, திருமிகு இரா. சிவா ச.ம.உ ஆகியோர் கலந்து கொள்ள, புதுவை திரு கந்தசாமி அவர்களின் "பசி" என்ற நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நூலினை ஆய்வு செய்தவர்கள்: பேரா. முனைவர் திரு எ.மு. இராசன், காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி மற்றும் பேரா. முனைவர் திரு நா. இளங்கோ, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி

பாடல் படைத்திடுக - வஞ்சிவிருத்தம்- 01
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்றடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்றங்(கு)
அண்டமொ டகலிடம் அளந்தனனே!

(அ) ஒவ்வொரு அடியிலும் மும்மூன்று சீர்கள் இருத்தல் வேண்டும்
(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:
விளம் + விளம் + காய் என்றிருக்கவேண்டும்
(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: மார்ச்சுத் திங்கள்,
31, 2005
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி -
605005.

-புலவர் அரங்க. நடராசன்

நூல் வெளியீட்டு விழா விவரங்கள்

அன்புசால் தமிழன்பர்களே! புதுச்சேரியின் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நெஞ்சில் உதிக்கும் சிந்தனை உளி கொண்டு செதுக்கிய நூற் சிலைகளைப் பற்றிய விவரங்களுக்காக தனியாக வலைப் பக்கமொன்றினை உருவாக்கி இருக்கிறோம். அந்நூல்களை தமிழன்பர்கள் வாங்கி படிப்பதற்கு ஏதுவாக படைப்பாளிகளின் முகவரிகள், தொலைபேசி/ செல்லிடப்பேசி எண்களும் தரப்படுகின்றன.
விவரமான வலைப்பக்கம் இதோ.


பாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை
பாவலர்களிடமிருந்து பாடல்கள் பெறப்பட்டு
அவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை
அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக
படிக்கப்படுமென்றும், சிறந்த பாடல்களுக்கு
பரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்
சங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்
அவர்கள் அறிவித்தார்.
படைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்ச் சங்க கட்டிடம்,
40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.
கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம்
முழுநிலவுப் பாவரங்க விவரங்கள் -
நண்பர்கள் தோட்டம்- கவிதைப் பூங்கா அமைப்பினர் ஒவ்வொரு மாதமும், முழுநிலவு நாள் முன்னிரவில் தமிழன்பர்கள் பங்கு பெறும் முழுநிலவுப் பாவரங்கம் ஒன்றினை நடத்துகின்றனர். மாறுபாடான பாடுபொருள் தலைப்புகள் தரப்பட்டு, பாவலர்கள் பாடல்கள் யாத்தளிக்கும் நிகழ்ச்சி மிகவும் அருமையானதொன்று. அத்துடன் ஒவ்வொரு மாதமும் ஏதேனுமொரு பாவலரின் நூல் வெளியீடு செய்யப்படுவதும் போற்றத் தக்கதாகும்.


நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திருமிகு க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ, பாவலர் இரோடு தமிழன்பன், புலவரேறு தமிழ்மாமணி, அரிமதி தென்னகனார்

வெள்ளிவிழா பாவரங்கமான இருபத்தைந்தாவது நிலவரங்கம் வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், 25.3.2005 மாலை ஆறு மணியளவில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பாவலர் இரோடு தமிழன்பன் தலைமையில் இனிதே நடந்தேறியது. அவ்வமயம் புலவரேறு தமிழ்மாமணி அரிமதித் தென்னகனார் அவர்களின் 125ஆவது நூலான "வீர தீரக் கதைகள்" மற்றும் பாவலர் தி. அமிர்த கணேசனின் இரண்டு நூல்களான, "உள்வெளி", இரண்டாம் திங்களின் 24 நாட்கள்" ஆகியவையும் வெளியிடப்பட்டன.

முழுநிலவு பாவரங்க விவரங்கள் இதோ


கலைமாமணி கல்லாடனுக்கு புலவர் துரை.மாலிறையன் சிறப்பு செய்தல்

நூல்கள் வெளியீட்டு விழா

தூய மீட்பரின் அன்னை இல்லத்தில்
19.03.2005 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் மக்கள் கலைக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நூல்கள் வெளியீட்டு விழா முனைவர் திரு மு. கலைவேந்தன் தலைமையில் இனிதே நடந்தேறியது. அவ்வமயம் கலைமாமணி கல்லாடனின் "இலக்கிய வண்ணங்கள்" என்ற நூலும், திருமதி கு. அன்புக்கரசியின் "கல்லாடனின் கவிதைகளில் இயற்கை" எனும் ஆய்வு நூலும் திருமிகு க. இலட்சுமிநாராயணன் ச.ம.உ அவர்களால் வெளியிடப்பட்டன. நூல்களை ஆய்வு செய்து அறிமுகம் செய்தவர்: பேரா. முனைவர் சிவ. மாதவன் மற்றும் திரு நந்திவர்மன்.

மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா

புதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு
வீர வணக்கமாக
11.12.2004
அன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த
மரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்
பாடல்களூக்கான இணைப்புத்தொடர்:
மாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்

பொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்

கவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
நாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்
நோக்கவுரையுடன் கலைமாமணி நாகி,
தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம்,
திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்
புதுவைத் தமிழ்மக்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது

மேலும் விவரங்களுக்கு முகவரி:
எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி
தொலைபேசி:

செல்லிடப்பேசி:

கவிதை வானில் கவியரங்க விவரங்கள்